தமிழ்நாடு

பழைய உணவு பொருட்களை பயன்படுத்துவதால் விஷமாக மாறும் "சவர்மா"

Published On 2023-09-20 05:48 GMT   |   Update On 2023-09-20 06:22 GMT
  • தமிழகத்திலும் இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் விரும்பி சாப்பிடும் உணவாக 'சவர்மா' இருக்கிறது.
  • சில பாக்டீரியாக்கள் உடலுக்குள் சென்ற 6 மணி நேரத்தில் பாதிப்பு அறிகுறிகளை காட்டுகின்றன.

அரபு நாடுகளில் இறைச்சி துண்டுகளை உலோக குச்சியில் சொருகி நெருப்பில் சுட்டு சாப்பிடுகிறார்கள். இதில் சில மாற்றங்களை செய்து நமது நாட்டில் 'சவர்மா' என்ற பெயரில் தயாரித்து விற்பனை செய்கிறார்கள்.

சிக்கன், முட்டைகோஸ், வெங்காயம், மிளகாய்தூள் மற்றும் பல்வேறு உணவு பொருட்களை கொண்டு தயாரிக்கும் 'சவர்மா' வாலிபர்கள் மற்றும் சிறுவர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இவற்றில் சேர்க்கப்படும் உணவு பொருட்கள் அனைத்தும் கெட்டு போகாமல் இருந்தால் உடலுக்கு எந்த கேடும் ஏற்படுவதில்லை.

அதே நேரத்தில் கெட்டுப்போன இறைச்சியை பயன்படுத்தி செய்வதால், அதனை சாப்பிடுபவர்களுக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட்டு விடுகின்றன. சில நேரத்தில் உயிர் பலியும் ஏற்பட்டு விடுகிறது. கேரள மாநிலத்தில் சமீபத்தில் 'சவர்மா' சாப்பிட்ட சிறிது நேரத்தில் பள்ளி மாணவன் ஒருவன் பரிதாபமாக இறந்தான்.

தமிழகத்திலும் இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் விரும்பி சாப்பிடும் உணவாக 'சவர்மா' இருக்கிறது. மாநில தலைநகரான சென்னையில் பலர் விரும்பி சாப்பிடும் உணவாக 'சவர்மா' உள்ளது. இந்நிலையில் நாமக்கல்லில் 'சவர்மா' சாப்பிட்ட 14 வயது பள்ளி மாணவி பரிதாபமாக இறந்தார்.

அவர் உணவு விஷமாகியதின் காரணமாக இறந்தது தெரிய வந்தது.

இதையடுத்து மாநிலம் முழுவதும் உள்ள உணவகங்களில் சுகாதாரத் துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். அதில் பல கடைகளில் இருந்து பழைய உணவு பொருட்களை சுகாதாரத்துறையினர் கைப்பற்றினர்.

சில பாக்டீரியாக்கள் உடலுக்குள் சென்ற 6 மணி நேரத்தில் பாதிப்பு அறிகுறிகளை காட்டுகின்றன. சில பாக்டீரியாக்கள் 72 மணி நேரத்திற்கு பிறகு வேலை செய்கிறது. விஷமாகும் உணவு குழந்தைகள் மற்றும் முதியவர்களை அதிகமாக பாதிக்கின்றன. பாதிப்பு தீவிரமடைந்த உடன் அது மற்ற உறுப்புகளை பாதிக்கிறது.

'சவர்மா'வை பொறுத்தவரை பழைய உணவு பொருட்கள் மற்றும் கெட்டுப்போன இறைச்சியோ மற்றும் ஏற்கனவே தயாரித்த உணவை குளிர்ச்சி அடைய செய்து விட்டு மீண்டும் சூடுப்படுத்தி பயன்படுத்தாமல் இருந்தால் பயப்பட வேண்டியதில்லை என்று உணவுத்துறை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News