தமிழ்நாடு

அய்யலூர் ஆட்டுச்சந்தையில் ஆடுகளை வாங்க குவிந்த வியாபாரிகளை காணலாம்.

தீபாவளியை முன்னிட்டு அய்யலூர் சந்தையில் ரூ.2 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனை

Published On 2022-10-20 05:33 GMT   |   Update On 2022-10-20 05:33 GMT
  • தேனி, திண்டுக்கல், கரூர், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் ஆடுகளை வாங்கிச்சென்றனர்.
  • ஒட்டன்சத்திரம் சந்தையிலும் இன்று ஆடுகள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது.

வடமதுரை:

திண்டுக்கல் அருகில் உள்ள அய்யலூரில் வாரந்தோறும் வியாழக்கிழமை ஆட்டுச்சந்தை நடத்தப்பட்டு வருகிறது. தற்போது தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 3 நாட்களே இருப்பதால் ஏராளமான விவசாயிகள் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

தேனி, திண்டுக்கல், கரூர், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் ஆடுகளை வாங்கிச்சென்றனர். சாதாரணமாக ரூ.5000-க்கு விற்பனையாகும் ஆடுகள் இன்று ரூ.7000 வரை விற்பனையானது. இதனால் விவசாயிகளுக்கு லாபம் கிடைத்தது.

ஆனால் கோழிகளை விற்பனைக்கு கொண்டு வந்த விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர். ரூ.400-க்கு விற்கப்படும் கோழி ரூ.300 மற்றும் அதற்கு கீழ் விற்பனையானது. வேறு வழியின்றி கிடைத்த விலைக்கு கோழிகளை விற்றுச்சென்றனர். இதேபோல் சேவல்களும் அதிகளவில் கொண்டு வந்து விற்பனை செய்யப்பட்டன.

கட்டுசேவல்கள் ரூ.2000 முதல் ரூ.10000 வரை விற்கப்பட்டது. மொத்தத்தில் இன்று மட்டும் அய்யலூர் ஆட்டுச்சந்தையில் ரூ.2 கோடிக்கு மேல் விற்பனை நடைபெற்றது.

முன்னதாகவே மணப்பாறை, வேடசந்தூர், ஒட்டன்சத்திரம் ஆகிய பகுதிகளில் சந்தை நடத்தப்பட்டதால் அங்கு அதிகளவு வியாபாரிகள் சென்றுவிட்டனர். இதனால் ரூ.4 கோடி வர்த்தகம் நடைபெறும் என்று எதிர்பார்த்த நிலையில் அதற்கு குறைவாகவே ஆடுகள் விற்பனையாகின.

நேற்று இப்பகுதியில் பெய்த மழை காரணமாக சந்தைப்பகுதி சகதிகாடாக இருந்தது. இதனால் சாலையோரங்களிலேயே வைத்து ஆடுகள் விற்பனை செய்யப்பட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வழக்கமாக தீபாவளிக்கு முன்னதாக பண்ணை அமைத்து தொழில் செய்பவர்கள் தங்கள் ஊழியர்களுக்கு போனஸ் மற்றும் புத்தாடைகள் வழங்குவது வழக்கம். அதனை சந்தையில் வைத்து வழங்கி அவர்களுக்கு உணவும் வழங்கினர். இதனால் தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதேபோல் ஒட்டன்சத்திரம் சந்தையிலும் இன்று ஆடுகள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. வழக்கமாக ஆட்டுச்சந்தைக்கு 200 ஆடுகள் வரை கொண்டு வரப்படும். இன்று சுமார் 1000 ஆடுகள் வரை விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன. இதில் கிடா எனப்படும் கருப்பு நிற ஆடு ரூ.25ஆயிரம் வரை விற்பனையானது.

மற்ற ஆடுகள் ரூ.10ஆயிரம் வரையிலும், ஆட்டுக்குட்டி ரூ.2000 முதல் விற்பனையானது. பழனி, தொப்பம்பட்டி, கன்னிவாடி உள்ளிட்ட சுற்றுப்புற பகுதி வியாபாரிகள் ஆடுகளை வாங்கிச்சென்றனர். மார்க்கெட்டில் இன்று சுமார் ரூ.1 கோடி வரை வர்த்தகம் நடைபெற்றது என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News