சென்னைக்கு வேனில் கடத்திய ரூ.12 லட்சம் குட்கா பறிமுதல்
- பள்ளிகொண்டா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடியில் போலீசார் இரவு வாகன சோதனை நடத்தினர்.
- வேனில் மேலும் சில போதை பொருட்கள் இருந்தது தொடர்பாக உணவுப்பொருள் பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
வேலூர்:
பெங்களூருவில் இருந்து சென்னைக்கு வேலூர் வழியாக குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்களை கடத்துகின்றனர். இதனை தடுக்க தேசிய நெடுஞ்சாலைகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் பள்ளிகொண்டா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடியில் பள்ளிகொண்டா போலீசார் நேற்று இரவு வாகன சோதனை நடத்தினர். அப்போது பெங்களூருவில் இருந்து சென்னை நோக்கி வேகமாக வந்த மினி வேனை மடக்கி சோதனையிட்டனர்.
அதில் தடைசெய்யப்பட்ட குட்காவை மூட்டைகளில் கட்டி வைத்திருந்தனர். இதன் மதிப்பு ரூ.12 லட்சம். குட்காவை போலீசார் மினி வேனுடன் பறிமுதல் செய்தனர். இந்த வேனில் மேலும் சில போதை பொருட்கள் இருந்தது. இது தொடர்பாக உணவுப்பொருள் பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். இது குறித்து பெங்களூருவை சேர்ந்த ரமேஷ், ராஜேஷ் ஆகியோரை மடக்கி பிடித்தனர்.
குட்கா எங்கிருந்து யாருக்கு கடத்திச் செல்லப்பட்டது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.