தமிழ்நாடு

நாகூரில் குழாய் உடைந்து பல லட்சம் லிட்டர் கச்சா எண்ணெய் கடலில் கலந்தது- பொதுமக்கள் போராட்டம்

Published On 2023-03-03 10:00 GMT   |   Update On 2023-03-03 10:15 GMT
  • இரும்பு குழாய் உடைப்பின் காரணமாக பல லட்சம் லிட்டர் கச்சா எண்ணெய் கடலில் கலந்துள்ளது.
  • கடலில் கச்சா எண்ணெய் கலந்த சம்பவம் மீனவ கிராம பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நாகப்பட்டினம்:

நாகை மாவட்டம் நாகூரில் சி.பி.சி.எல். எண்ணெய் நிறுவனத்திற்கு சொந்தமான 3 இரும்பு குழாய்கள் கடலோர பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்றிரவு திடீரென ஒரு குழாயில் உடைப்பு ஏற்பட்டு உள்ளது.

இந்த உடைப்பின் காரணமாக பல லட்சம் லிட்டர் கச்சா எண்ணெய் கடலில் கலந்துள்ளது.

இதனால் நாகூர், பட்டினச்சேரி ஆகிய பகுதிகளில் உள்ள மீனவ கிராம மக்களுக்கு சுவாச கோளாறு, கண் எரிச்சல் ஏற்படுவதுடன், மீன்கள் உயிரிழக்கும் அபாயமும் ஏற்பட்டு உள்ளது.

இதனைத் தொடர்ந்து கூடுதல் கலெக்டர் பிரித்விராஜ், சி.பி.சி.எல். அதிகாரிகள், மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன், தாசில்தார் ஆகியோர் எண்ணெய் மிதந்து வரும் கடற்கரை பகுதிகளை நேரில் ஆய்வு செய்தனர். மேலும் அந்த கிராம மக்களுடன் சி.பி.சி.எல். அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் சென்னையில் இருந்து டோனியர் விமானம் மூலமாக குழாய் உடைப்பு ஏற்பட்ட பகுதிகளை இந்திய கடலோர காவல் படையினர் பார்வையிட்டு வருகின்றனர்.

கடலில் கச்சா எண்ணெய் பரவி உள்ளதை நீக்குவதற்கான வழிமுறைகளான ஸ்பில் டிஸ்பரசன் பவுடர் மூலமாகவோ அல்லது குழாய் மூலம் எண்ணெயை நீக்குவதா அல்லது கடல் நீரை படிய வைத்து அதனை அகற்றுவதா என்பது குறித்தும் இந்திய கடலோர காவல் படை ரோந்து கப்பல் மற்றும் டோனியர் விமானம் மூலம் ஆய்வு செய்தனர். மேலும் எவ்வளவு தூரம் எண்ணெய் பரவி உள்ளது என கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் கடலில் எண்ணெய் பரவாமல் இருக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் பட்டினச்சேரி மீனவர்கள் கச்சா எண்ணெயை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். அசம்பாவிதங்களை தவிர்க்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

கடலில் கச்சா எண்ணெய் கலந்த சம்பவம் மீனவ கிராம பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News