தமிழ்நாடு

பாராளுமன்ற தேர்தல்: திருப்பூர் மாவட்டத்தில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

Published On 2024-04-19 06:20 GMT   |   Update On 2024-04-19 06:20 GMT
  • கோடை வெயில் காரணமாக பெரும்பாலான வாக்காளர்கள் காலையிலேயே வாக்குச்சாவடிகளில் குவிந்தனர்.
  • வாக்குச்சாவடியின் அனைத்து நிகழ்வுகளும் பதிவு செய்து சேமித்து வைக்கப்பட்டன.

திருப்பூர்:

திருப்பூர் பாராளுமன்ற தொகுதியில் திருப்பூர் வடக்கு, தெற்கு சட்டமன்ற தொகுதி மற்றும் ஈரோடு மாவட்டம் அந்தியூர், பவானி, பெருந்துறை, கோபிசெட்டிபாளையம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.

இத்தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த சுப்பராயன், அ.தி.மு.க. சார்பில் அருணாசலம், பா.ஜ.க.சார்பில் ஏ.பி.முருகானந்தம், நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமி உள்பட 13 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

இந்தநிலையில் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. முதலில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் வாக்குச்சாவடி முகவர்கள் முன்னிலையில் காலை 6 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. 50 மாதிரி வாக்குகள் செலுத்தப்பட்டு சரிபார்க்கப்பட்டது. அதன்பிறகு காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

இதில் வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர். கோடை வெயில் காரணமாக பெரும்பாலான வாக்காளர்கள் காலையிலேயே வாக்குச்சாவடிகளில் குவிந்தனர். பின்னர் அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது வாக்கினை செலுத்தினர்.

வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு வசதியாக திருப்பூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் மொத்தம் 1745 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தது. அதன்படி பெருந்துறையில் 264, பவானியில் 289, அந்தியூரில் 262 கோபிசெட்டிபாளையத்தில் 296, திருப்பூர் வடக்கு 385, தெற்கு 248 என மொத்தம் 1745 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தது. மொத்தம் 16 லட்சத்து 8ஆயிரத்து 521 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள 13 வகையான அடையாள ஆவணங்களை காண்பித்து வாக்காளர்கள் வாக்களித்தனர்.

வாக்குப்பதிவுக்காக 2081 கட்டுப்பாட்டு எந்திரங்கள், 2081 வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் 30 சதவீதம் கூடுதலாக 2555 விவி.பேட் எந்திரங்கள் திருப்பூர் பாராளுமன்ற தொகுதி தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்டன. வாக்காளர்களின் வசதிக்காக வாக்குச்சாவடி மையங்களில் குடிநீர் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு இருந்தது. மேலும் போலீசார், துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் வாக்காளர்கள் எவ்வித அச்சமின்றி தங்களது வாக்கினை பதிவு செய்து சென்றனர். அரசியல் கட்சியினர் வாக்குச்சாவடி அருகே செல்லாமல் இருக்க 100 மீட்டர் தொலைவில் கோடு வரையப்பட்டு இருந்தது. அதனை தாண்டி அவர்கள் வருவதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

பெருந்துறை தொகுதியில் 10 வாக்குச்சாவடிகள், பவானி தொகுதியில் 23, அந்தியூர் தொகுதியில் 38, கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியில் 45, திருப்பூர் வடக்கு தொகுதியில் 98, திருப்பூர் தெற்கு தொகுதியில் 79 என திருப்பூர் பாராளுமன்ற தொகுதியில் மொத்தம் 293 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு இருந்தது. அந்த வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டன.

வாக்குச்சாவடியின் அனைத்து நிகழ்வுகளும் பதிவு செய்து சேமித்து வைக்கப்பட்டன. மேலும் பதற்றமான வாக்குச்சாவடிகளின் நிகழ்வுகளை திருப்பூர் மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர், கலெக்டர் அலுவலகத்தில் இருந்தும், சென்னையில் மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் இருந்தும் கண்காணிக்க வசதி செய்யப்பட்டு இருந்தது. மேலும் பதற்றமான வாக்குச்சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் மற்றும் துணை ராணுவப்படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வாக்குச்சாவடிகளில் நடக்கும் நிகழ்வுகளை தேர்தல் பார்வையாளர்களுக்கு உடனுக்குடன் தகவல் கொடுக்கும் வகையில் நுண் பார்வையாளர்கள் பணியமர்த்தப்பட்டு இருந்தனர்.

திருப்பூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரியாக கலெக்டர் கிறிஸ்துராஜ் செயல்பட்டார்.

ஒரு சட்டசபைக்கு ஒருவர் வீதம் 6 உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகளும், 6 கூடுதல் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகளும் நியமிக்கப்பட்டு பணியாற்றினர்.

வாக்குச்சாவடியில் ஒரு தலைமை வாக்குச்சாவடி அலுவலர், வாக்குச்சாவடி நிலை அலுவலர் 3 பேர் மற்றும் கூடுதல் அலுவலர்கள் இருப்பு என மொத்தம் 8 ஆயிரத்து 700 பேர், நுண்பார்வையாளர்கள், மண்டல அலுவலர்கள் உள்பட மொத்தம் 10 ஆயிரம் பேர் தேர்தல் பணியில் ஈடுபட்டனர். வாக்குப்பதிவு சதவீதம் குறித்து 2 மணி நேரத்துக்கு ஒருமுறை திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் நடத்தும் அதிகாரியின் அலுவலகத்துக்கு தெரிவிக்க வசதி செய்யப்பட்டு இருந்தது. அதன் மூலம் 2 மணி நேரத்திற்கு ஒரு முறை வாக்கு சதவீதம் தெரிவிக்கப்பட்டது. வாக்குப்பதிவு இன்று மாலை 6 மணி வரை நடக்கிறது. அதன்பிறகு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் வாக்கு எண்ணும் மையமான திருப்பூர் எல்.ஆர்.ஜி. கல்லூரிக்கு ஜி.பி.எஸ்., பொருத்தப்பட்ட வாகனத்தில் துணை ராணுவத்தினர் மற்றும் பலத்த போலீசார் பாதுகாப்புடன் எடுத்து வரப்பட உள்ளது. பின்னர் அங்குள்ள அறையில் வைத்து பூட்டி சீல் வைக்கப்பட உள்ளது.

Tags:    

Similar News