தமிழ்நாடு

முருகர் தேர் வெள்ளோட்டம் நடந்த காட்சி.

திருவண்ணாமலையில் முருகர் தேர் வெள்ளோட்டம்- ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

Update: 2022-11-26 10:01 GMT
  • 2 ஆண்டுகளாக நிலையில் நிறுத்தியிருந்த தேர்களை மறுசீரமைப்பு செய்யும் பணி நடந்து முடிந்துள்ளது.
  • துணை சபாநாயகர் பிச்சாண்டி தேரை வடம் பிடித்து தொடங்கி வைத்தார்.

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு கார்த்திகை தீபத்திருவிழா தேரோட்டம் இந்த ஆண்டு நடக்கிறது. எனவே, 2 ஆண்டுகளாக நிலையில் நிறுத்தியிருந்த தேர்களை மறுசீரமைப்பு செய்யும் பணி நடந்து முடிந்துள்ளது.

அதில், சுப்பிரமணியர் தேர் எனப்படும் முருகர் தேர் பீடத்தின் மேற்பகுதி முற்றிலுமாக புதிதாக மாற்றி அமைக்கப்பட்டு மறுசீரமைப்பு செய்யப்பட்டது.

எனவே அதன் உறுதித்தன்மைக்காக வெள்ளோட்டம் நடத்த கோவில் நிர்வாகம் முடிவு செய்தது.

அதையொட்டி கடந்த 20-ந் தேதி சுப்பிரமணியர் தேர் வெள்ளோட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால் தேர் சீரமைப்பு பணியில் மேலும் சில மாற்றங்களை செய்ய வேண்டும் என பொதுப்பணித்துறை பொறியாளர்கள் குழு அறிவுறுத்தியதால், கடைசி நேரத்தில் வெள்ளோட்டம் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில், குறிப்பிட்ட சில பழுதுகள் முற்றிலுமாக சரி செய்யப்பட்டதால் முருகர் தேர் வெள்ளோட்டம் இன்று நடைபெறும் என்று கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதை தொடர்ந்து இன்று காலை முருகர் தேர் வெள்ளோட்டம் நடந்தது. மாட வீதியில் தேர் பவனி வந்தது. துணை சபாநாயகர் பிச்சாண்டி தேரை வடம் பிடித்து தொடங்கி வைத்தார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

நிகழ்ச்சியில் கோவில் இணை ஆணையர் அசோக்குமார் மாநில தடகள சங்க துணைத்தலைவர் கம்பன், நகரச் செயலாளர் கார்த்திக் வேல்மாறன், முன்னாள் நகர மன்ற தலைவர் ஸ்ரீதரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News