தமிழ்நாடு

"நடப்போம் நலம் பெறுவோம்" என்னும் நோக்கத்தில் கன்னியாகுமரியில் நடைபயணம் மேற்கொண்ட அமைச்சர்கள்

Published On 2023-08-28 06:07 GMT   |   Update On 2023-08-28 06:07 GMT
  • மாணவ-மாணவிகள், சுகாதார துறையினர் செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
  • நடை பயணத்தில் பங்கேற்றவர்களுக்கு குடிநீர், பானக்காரம், கடலை மிட்டாய் மற்றும் சத்து உணவு பொருட்கள் வழங்கப்பட்டன.

கன்னியாகுமரி:

பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் "நடப்போம் நலம் பெறுவோம்" என்னும் நோக்கத்தின் அடிப்படையில் பொதுமக்களுடன் அமைச்சர்கள் பங்கேற்ற நடைபயண நிகழ்ச்சி கன்னியாகுமரியில் இன்று காலை நடந்தது.

அதிகாலை 5.30 மணிக்கு கன்னியாகுமரி சன்செட் பாயிண்ட் கடற்கரை பகுதியில் இருந்து நடைபயணம் தொடங்கியது. இந்த நடைபயண நிகழ்ச்சியில் பொதுமக்களுடன் இணைந்து அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், மனோதங்கராஜ், மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர், ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ., நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள், சுகாதார துறையினர் செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

கன்னியாகுமரி சன்செட் பாயிண்ட் கடற்கரை பகுதியில் இருந்து புறப்பட்ட இந்த நடைபயணம் சிலுவை நகர், சீரோ பாய்ண்ட், நான்கு வழி சாலை, ரெயில்வே மேம்பாலம், முருகன்குன்றம் வழியாக பரமார்த்தலிங்கபுரம் மின் வாரிய அலுவலகம் முன்பு வரைசென்று திரும்பி மீண்டும் அதே வழியாக தொடங்கிய இடமான சன்செட் பாயிண்ட் கடற்கரை பகுதியில் நிறைவடைந்தது.

மொத்தம் 8 கிலோ மீட்டர் தூரம் இந்த நடைபயணம் நடந்தது. இன்று காலை தொடங்கிய இந்த நடைபயணம் காலை 7 மணிக்கு நிறைவடைந்தது. அதன்பிறகு சன் செட் பாயிண்ட் கடற்கரையில் மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது. இந்த நடை பயணத்தில் பங்கேற்றவர்களுக்கு குடிநீர், பானக்காரம், கடலை மிட்டாய் மற்றும் சத்து உணவு பொருட்கள் வழங்கப்பட்டன.

Tags:    

Similar News