தியேட்டர் முன்பு திரண்ட ரசிகர்கள் ஆட்டம், பாட்டம் உற்சாகத்துடன் கோஷமிட்ட காட்சி.
"லியோ" திரைப்படம் 41 தியேட்டர்களில் வெளியானது: விஜய் கட்-அவுட்டுகளுக்கு பாலாபிஷேகம் செய்து ரசிகர்கள் உற்சாகம்
- விஜய் தோன்றும் முதல் காட்சியில் திரையரங்குக்குள் ரசிகர்களின் விசில் சத்தம் திரையரங்கை அதிர வைத்தது.
- ரசிகர்கள் விஜய் வாழ்க, தமிழகத்தின் அடுத்த முதல்வர் வாழ்க என கோஷமிட்டனர்.
மதுரை:
நடிகர் விஜய் நடித்து, டைரக்டர் லோகேஷ் கனகராஜ் இயக்கி, ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய லியோ திரைப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி மதுரை மாவட்டத்தில் மட்டும் 41 திரையரங்குகளில் லியோ திரைப்படம் இன்று வெளியானது. பல்வேறு பிரச்சனைகளுக்கு இடையே 4 மணி காட்சியை காட்சிகள் காண ரசிகர்கள் எடுத்த டிக்கெட்டுகள் அனைத்தும் காலை 9 மணிக்கு காண்பதற்கு அனுமதிக்கப்பட்டது.
அதன்படி மதுரையில் வெற்றி, தங்கரீகல், கோபுரம் சினிமாஸ், சோலைமலை, பழனி ஆறுமுகா, ஜெயம், தமிழ் ஜெயா உள்ளிட்ட 41 திரையரங்குகளிலும் முதல் காட்சியை 20 ஆயிரத்து 171 பேர் காண்பதற்கு டிக்கெட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இதையடுத்து முதல் காட்சியை காண அதிகாலை முதலே ரசிகர்கள் தியேட்டர்கள் முன்பு குவிந்தனர்.
இது ரசிகர்களின் காட்சி என்பதால் திரையரங்கு முன்பு வைக்கப்பட்டுள்ள நடிகர் விஜய்யின் கட்-அவுட்டுகளுக்கு ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்தும், கலர் பேப்பர் வெடி வெடித்தும் கொண்டாடினர். கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்ததால் திரையரங்குகள் உள்ள அந்தந்த பகுதிகளில் உள்ள காவல் நிலைய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
முன்னதாக காலையில் மதுரை பெரியார் பஸ் நிலைய பகுதிகளில் ஒன்று திரண்ட விஜய் ரசிகர்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் தங்களது மோட்டார் சைக்கிள்களில் விஜய் மக்கள் இயக்க கொடிகளை கட்டிக்கொண்டு தியேட்டர்களை நோக்கி ஊர்வலமாக ஆராவாரத்துடன் சென்றனர்.
திரைப்படத்தில் விஜய் தோன்றும் முதல் காட்சியில் திரையரங்குக்குள் ரசிகர்களின் விசில் சத்தம் திரையரங்கை அதிர வைத்தது. அப்போது ஆரவாரம் செய்த ரசிகர்கள் விஜய் வாழ்க, தமிழகத்தின் அடுத்த முதல்வர் வாழ்க என கோஷமிட்டனர்.