தமிழ்நாடு

மலை ரெயில் இன்று ரத்து

Published On 2023-12-20 06:00 GMT   |   Update On 2023-12-20 06:16 GMT
  • மலைரெயில், அங்கிருந்து மீண்டும் மேட்டுப்பாளையம் நோக்கி சென்றது.
  • அதிகாரிகள், ரெயில்வே ஊழியர்களுடன் விரைந்து வந்து சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர்.

கோவை:

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக பரவலான மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் மலைப்பாதை மட்டுமல்லாமல், மலை ரெயில் பாதையிலும் மண்சரிவு, மரங்கள் முறிந்து விழுவது உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டு வந்தன. இதனால் ரெயில் சேவையும் ரத்து செய்யப்பட்டிருந்தது.

மழை ஒய்ந்த பின்னர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு தான் மலைரெயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது. அதனை தொடர்ந்து சுற்றுலா பயணிகள், உள்ளூர் மக்கள் ரெயிலில் பயணித்து வந்தனர்.

வழக்கம் போல இன்று காலை 7.10 மணிக்கு, மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு 180 பயணிகளுடன் மலைரெயில் புறப்பட்டது.

மலைரெயில் கல்லார்-ஹில்குரோவ் இடையே சென்ற போது தண்டவாள பகுதியில் பாறைகள் உருண்டு விழுந்ததுடன், மண்சரிவும் ஏற்பட்டது. இதனால் தண்டவாளம் சேதம் அடைந்தது.

இதை பார்த்ததும் ரெயில் என்ஜின் டிரைவர், ரெயிலை சில அடி தூரத்திற்கு முன்பு நிறுத்தி விட்டு, அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்.

இதையடுத்து அதிகாரிகள், ரெயில்வே ஊழியர்களுடன் விரைந்து வந்து சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் மலைரெயில், அங்கிருந்து மீண்டும் மேட்டுப்பாளையம் நோக்கி சென்றது.

சுற்றுலா பயணிகள் அங்கிருந்து பஸ் மூலமாக ஊட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மலைரெயிலில் பயணிக்க வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

மலை ரெயில் பாதையில் மண்சரிவு ஏற்பட்டதை அடுத்து இன்று மட்டும் மேட்டுப்பாளையம்-ஊட்டி மலைரெயில் சேவை ரத்து செய்யப்படுவதாக ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

Tags:    

Similar News