தமிழ்நாடு

போலி ஆவணங்கள் மூலம் நிலம் மோசடி- கைதான தென்காசி சார்பதிவாளர் உள்பட 4 பேர் ஜெயிலில் அடைப்பு

Published On 2022-09-30 05:11 GMT   |   Update On 2022-09-30 05:11 GMT
  • சார்பதிவாளர் மணி, சோமசுந்தரபாரதி, தனசீலன், வடிவேலு ஆகிய 4 பேரை நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.
  • லலிதா, பவுன்ராஜ், முகம்மதுரபீக் உள்ளிட்ட மேலும் 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

நெல்லை:

தமிழகத்தில் மோசடி, போலி, பத்திரப்பதிவுகளை தடுக்கும் வகையில் தி.மு.க. அரசு சட்டப்பேரவையில் மத்திய பதிவுச் சட்டத்தில் தமிழக அளவில் திருத்தம் கொண்டு வந்தது.

அதன்மூலம் போலி பதிவுகள் குறித்து பதிவாளரே ஆய்வு செய்து, அவற்றை ரத்து செய்ய முடியும். மேலும் போலி பத்திரப்பதிவு செய்யப்பட்டதில் சார்-பதிவாளருக்கு தொடர்பு இருந்தால் அவரையும் கைது செய்யலாம் எனவும் தமிழக அரசு சட்டம் இயற்றியது.

இந்த மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்த நிலையில், மத்திய சட்டத்தில் திருத்தம் என்பதால் குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. குடியரசு தலைவர் திரவுபதி முர்மு இந்த சட்டத்திருத்தத்திற்கு சமீபத்தில் ஒப்புதல் அளித்தார். இதன்மூலம் இந்தச் சட்டம் அமலுக்கு வந்துள்ளது.

இந்த சட்டம் பொதுமக்களிடம் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் போலி பத்திரப்பதிவு தொடர்பாக ஆயிரக்கணக்கான புகார்கள் வருகிறது.

மதுரையை சேர்ந்தவர் பிரபல தொழில் அதிபர் கருமுத்து கண்ணன் (வயது69). இந்து சமய அறநிலையத்துறையில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ள இவர் கல்வி நிறுவனங்களையும் நடத்தி வருகிறார்.

இவரது நிறுவனத்தின் மேலாளரான மதுரை கப்பனூரை சேர்ந்த சபாபதி (54) என்பவர் தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார்.

அதில், கருமுத்து கண்ணன் குடும்பத்திற்கு சொந்தமான பலகோடி ரூபாய் மதிப்புள்ள 1.75 ஏக்கர் நிலம் தென்காசி மாவட்டம் ஆயிரப்பேரியில் உள்ளது. அந்த நிலத்திற்கு போலியாக இறப்பு சான்றிதழ் மற்றும் வாரிசு சான்றிதழ் உள்ளிட்டவை தயாரித்து அதன்மூலம் தென்காசி 1-ம் எண் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

எனவே இது தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.

இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் இது தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டார்.

அதன்பேரில் மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவு டி.எஸ்.பி. தெய்வம் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் சந்திசெல்வி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது திருச்சியை சேர்ந்த லலிதா என்பவர் கடந்த மாதம் 16-ந் தேதி போலியாக இறப்பு சான்றிதழ் மற்றும் வாரிசு சான்றிதழ் தயாரித்து அந்த நிலத்தை விற்பனை செய்தது தெரியவந்தது.

மேலும் ஊத்துமலையை சேர்ந்த சோமசுந்தரபாரதி, சுரண்டையை சேர்ந்த பவுன்ராஜ், தென்காசியை சேர்ந்த முகம்மதுரபீக் ஆகியார் அவருக்கு உடந்தையாக இருந்துள்ளனர்.

பத்திரப்பதிவின்போது சாட்சிகளாக ஊத்துமலையை சேர்ந்த தனசீலன், சுரண்டையை சேர்ந்த வடிவேலு ஆகியார் கையெழுத்து போட்டுள்ளனர்.

தொடர் விசாரணையில் போலி பத்திரப்பதிவுக்கு தென்காசி 1-ம் எண் சார்பதிவாளரான நெல்லை டவுன் திருவள்ளுவர் நகரை சேர்ந்த மணி என்பவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து சார்பதிவாளர் மணி, சோமசுந்தரபாரதி, தனசீலன், வடிவேலு ஆகிய 4 பேரை நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

தொடர்ந்து லலிதா, பவுன்ராஜ், முகம்மதுரபீக் உள்ளிட்ட மேலும் 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

போலிப்பத்திரப்பதிவு செய்யப்பட்டதில் சார்பதிவாளருக்கு தொடர்பு இருந்தால் அவரையும் கைது செய்யலாம் என சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்ட நிலையில் அதில் முதல்நபராக தென்காசி 1-ம் என் சார்பதிவாளர் மணி கைது செய்யப்பட்டுள்ளார்.

Tags:    

Similar News