தமிழ்நாடு செய்திகள்

ஜக்காடு துணி வடிவமைப்பாளர் சந்திரயான்-3 ராக்கெட், நிலவு படங்களுடன் பெட்ஷீட் தயாரித்து அசத்தல்

Published On 2023-08-31 11:54 IST   |   Update On 2023-08-31 11:54:00 IST
  • பெட்ஷீட்களை உருவாக்க 2-க்கு 17 பருத்தி முறுக்கு நூலை கொண்டு 400 ஊக்ஸ் கொண்ட ஜக்கார்டு தறியில் நெசவு செய்துள்ளார்.
  • வடிவமைத்து நெசவு செய்து உருவாக்கிய பெட்ஷீட்டினை அப்புசாமி இஸ்ரோ நிறுவனத்திற்கும், தமிழகத்தினை சேர்ந்த விஞ்ஞானி வீரமுத்து வேலுவிற்கு பரிசளிக்க உள்ளதாக கூறினார்.

சென்னிமலை:

ஈரோடு மாவட்டம், சென்னிமலை 'சென்டெக்ஸ்' கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் ஜக்காடு துணி மற்றும் பெட்ஷீட் வடிவமைப்பாளராக பணியாற்றி வருபவர் அப்புசாமி.

இவர் தனது ஓய்வு நேரங்களில் தலைவர்களின் உருவங்களை கைத்தறி பெட்ஷீட்களில் வடிவமைத்து சாதனை புரிந்து வருகிறார்.

அப்புசாமி இதற்கு முன் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி, முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் மற்றும் கிரிக்கெட் வீரர் சச்சின், தோனி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி லோகோ என அந்த அந்த காலகட்டத்தில் நிகழும் நிகழ்வுகளை பருத்தி பெட்ஷீட்டில் ஜக்காடு கைத்தறி நெசவின் மூலம் நெசவு செய்து சாதனை படைத்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது இந்திய இஸ்ரோ விஞ்ஞானிகள் சந்திரயான்-3 நிலவில் வெற்றிகரமாக தரை இறக்கப்பட்டதை கொண்டாடும் விதமாகவும், இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டுதலை தெரிவிக்கும் விதமாக சந்திரயான்-3 ராக்கெட் மற்றும் நிலவு படங்களை பெட்ஷீட்டில் உருவாக்கியுள்ளார்.

இந்த பெட்ஷீட்களை உருவாக்க 2-க்கு 17 பருத்தி முறுக்கு நூலை கொண்டு 400 ஊக்ஸ் கொண்ட ஜக்கார்டு தறியில் நெசவு செய்துள்ளார். இதனை சந்திரயான் கவுண்டன் தொடங்கிய காலத்தில் இருந்து யோசித்து அதை வெற்றிகரமாக நிலையில் நிறுத்தப்பட்ட பின் வடிவமைத்து தறியில் நெசவு செய்ய ஆரம்பித்துள்ளார்.

இதை வடிவமைக்க ஒரு வார காலம் ஆகி உள்ளது. இதை அவரது ஓய்வு நேரத்தில் வடிவமைத்து நெசவு செய்துள்ளார். இந்த பெட்ஷீட்டின் அளவு "60-க்கு 90"ஆகும். வடிவமைத்து நெசவு செய்து உருவாக்கிய பெட்ஷீட்டினை அப்புசாமி இஸ்ரோ நிறுவனத்திற்கும், தமிழகத்தினை சேர்ந்த விஞ்ஞானி வீரமுத்து வேலுவிற்கு பரிசளிக்க உள்ளதாக கூறினார்.

Tags:    

Similar News