ரசாயன பொருட்கள் இன்றி கட்டப்பட்ட மூலிகை வீடு- பழங்காலத்தை நினைவுபடுத்திய இயற்கை ஆர்வலர்
- இயற்கை மூலிகை சாறுகள் கலந்த கலவையை கொண்டு எந்தவித ரசாயனமும் பயன்படுத்தாது வீட்டை கட்டியுள்ளனர்.
- கட்டிடத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள தூண்கள் செட்டிநாடு பகுதியில் வாங்கப்பட்டது.
கொடைக்கானல்:
கொடைக்கானல் வில்பட்டி பஞ்சாயத்திற்கு உட்பட்ட பள்ளங்கி கிராமத்தை ஒட்டிய அலத்துரை கிராமத்தில் இயற்கை எழில் சூழ்ந்த ரம்மியமான பகுதியில் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ரிதா, சிம்ரத்மல்லி தம்பதியினர் இயற்கை மூலப்பொருட்களைக் கொண்டு ரசாயன கலவை இல்லாத வீட்டை வடிவமைத்துள்ளனர்.
ஒரு துளி கூட சிமெண்ட் சேர்க்காமல் கிளிஞ்சல் சுண்ணாம்பு, கல் சுண்ணாம்பு, மணல், கருப்பட்டி, புளி, சப்பாத்திக்கள்ளி, வேப்பம்பட்டை, கடுக்காய், தயிர், முட்டை, நாரி செடி, நீல அவரை, கருங்கல், இயற்கை மூலிகை சாறுகள் கலந்த கலவையை கொண்டு எந்தவித ரசாயனமும் பயன்படுத்தாது வீட்டை கட்டியுள்ளனர்.
வீட்டின் உள்புறம் கருமருது, கடுக்காய் மரம், இளமருது, வேங்கை, பர்மா தேக்கு ஆகிய மரங்களைக் கொண்டு படிக்கட்டுகள், கைப்பிடிகள், பால்கனி ஆகியவற்றை அமைத்துள்ளனர். பண்டைய காலத்தில் பயன்படுத்தப்பட்ட மூலப்பொருட்களை போல் இறுக்கமான பொருட்களை கொண்டு மட்டும் வீட்டை அமைத்துள்ளனர்.
தரைத்தளத்தில் இரண்டு அறைகள், மேல் தளத்தில் இரண்டு அறைகள், முன்புறம் வராண்டா என அற்புதமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த வீட்டை வடிவமைப்பதற்கு சுமார் ரூ.1 கோடி ரூபாய் செலவானதாக இதை வடிவமைத்து தற்போது அதன் பாதுகாவலராக உள்ள தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த குமார் என்பவர் தெரிவித்துள்ளார். இந்த வீட்டின் உரிமையாளர் இதேபோல் கோவாவிலும் சிறிய அளவிலான ரிசார்ட் ஒன்றை அமைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் அவர் இயற்கை உணவுகளே உண்டு வருவதாகவும், இயற்கையாக தயாரிக்கப்பட்ட சோப்பு ஷாம்புகளை மட்டுமே அவர்கள் பயன்படுத்தி வருவதாகவும், இயற்கையின் பயன்பாடு குறித்து ஒரு சில வெளிநாட்டு மாணவர்களை அழைத்து வந்து கொடைக்கானலில் உள்ள இந்த இயற்கை வீட்டில் வைத்து அவர்களுக்கு விளக்க வகுப்புகள் நடத்தி வருவதாகவும் வீட்டின் பாதுகாவலர் குமார் தெரிவித்தார்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இயற்கை சூழல் அழிந்து வரும் நிலையில் பழங்காலத்தை நினைவுபடுத்தும் வகையில் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் கொடைக்கானலில் அமைத்துள்ள இயற்கை வீடு பல்வேறு தரப்பினரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. வெயில் காலங்களில் வீட்டினுள் குளிரான சீதோஷ்ண நிலையும், வெளியில் குளிரான சூழல் நிலவினால் வீட்டினுள் கதகதப்பான சூழல் இருக்கும் எனவும், இந்த வீட்டில் உறங்கும்போது கிடைக்கும் சுவாசம் நோய் நொடிகள் வராமல் தடுத்து நீண்ட ஆயுளை கொடுக்கும் என்றும், முறையாக பராமரித்து வந்தால் ஆயிரம் ஆண்டுகள் கூட இந்த வீடு பழுதடையாமல் இருக்கும் என்றும் தெரிவித்தார்.
இந்தக் கட்டிடத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள தூண்கள் செட்டிநாடு பகுதியில் வாங்கப்பட்டது. இப்பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகள் தற்போது இந்த வீட்டை அதிசயமாக பார்த்துச் செல்கின்றனர்.