தமிழ்நாடு

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை புகார்- அரசு பள்ளி ஆசிரியர் சஸ்பெண்டு

Published On 2022-08-28 05:31 GMT   |   Update On 2022-08-28 05:31 GMT
  • பள்ளி ஆசிரியர் மாணவிகளிடம் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் தொந்தரவு கொடுத்து வந்ததாக புகார் கூறப்பட்டுள்ளது.
  • ஆசிரியரால் பெரிதும் பாதிக்கப்பட்ட மாணவிகள் பள்ளிக்கு வர தயங்குகின்றனர்.

கோவை:

கோவை அடுத்த மத்தவராயபுரம் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இதில் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த பள்ளியில் இயற்பியல் ஆசிரியராக பால்குழந்தை ராஜ்(வயது54) என்பவர் பணியாற்றி வந்தார். இவர், மாணவிகளிடம் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் தொந்தரவு கொடுத்து வந்ததாக புகார் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் காருண்யா போலீஸ் நிலையம், கலெக்டர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், காருண்யா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

மத்வராயபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் இயற்பியல் ஆசிரியராக பணியாற்றி வரும் பால்குழந்தைராஜ் என்பவர் பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வருகிறார். இதனால் பள்ளி மாணவிகள் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர் ஏற்கனவே இதுபோன்ற ஒழுங்கீன செயலில் ஈடுபட்டதன் காரணமாக இங்கிருந்து வால்பாறையில் உள்ள பள்ளிக்கு மாற்றப்பட்டார்.

இதனை தொடர்ந்து தண்டனை காலம் முடிந்து இதே பள்ளிக்கு மாறுதலாகி, கடந்த சில வருடங்களாக பணியாற்றி வருகிறார்.

இருப்பினும் பலமுறை மாணவிகளிடம் தொடர்ந்து தவறாக நடக்கிறார். இவரால் பெரிதும் பாதிக்கப்பட்ட மாணவிகள் பள்ளிக்கு வர தயங்குகின்றனர். எனவே அவர்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தனர்.

இந்த நிலையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பூபதி துறை ரீதியாக விசாரணை மேற்கொண்டு, இயற்பியல் ஆசிரியர் பால்குழந்தை ராஜை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.

Tags:    

Similar News