தமிழ்நாடு செய்திகள்

தி.மு.க. மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி- உதயநிதி ஸ்டாலின் வழங்குகிறார்

Published On 2022-10-29 11:03 IST   |   Update On 2022-10-29 11:03:00 IST
  • திருவண்ணாமலை நகர எல்லையான சோ.கீழ்நாச்சிப் பட்டு பகுதியில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
  • திருவண்ணாமலை தெற்கு மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் 60 அடி உயரமுள்ள கட்சி கொடியை ஏற்றி வைக்கிறார்.

திருவண்ணாமலை:

திருவண்ணாமலையில் இன்று தி.மு.க. சார்பில் திராவிட மாடல் பயிற்சி பாசறை மற்றும் நகர்புற-ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு மற்றும் கட்சி முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழாவில் மாநில இளைஞர் அணி செயலாளர் உதயநிதிஸ்டாலின் எம்.எல்.ஏ. பங்கேற்றார்.

இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக உதயநிதிஸ்டாலின் நேற்று இரவு சுமார் 8 மணியளவில் திருவண்ணாமலைக்கு வருகை தந்தார். அவருக்கு திருவண்ணாமலை நகர எல்லையான சோ.கீழ்நாச்சிப் பட்டு பகுதியில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

தொடர்ந்து அவர் இன்று காலை திருவண்ணாமலை திருக்கோவிலூர் சாலையில் உள்ள எ.வ.வேலு மகளிர் மெட்ரிக் பள்ளி திறப்பு விழாவில்கலந்து கொண்டு பள்ளியை திறந்து வைத்தார்.

பின்னர் திருவண்ணாமலை அண்ணா நுழைவு வாயில் அருகில் உள்ள கருணாநிதி சிலைக்கு உதயநிதி ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

கலசபாக்கம் தொகுதி தென்பள்ளிப்பட்டு ஊராட்சி கலைஞர் திடலில் திருவண்ணாமலை தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி சார்பில் நடைபெற உள்ள திராவிட மாடல் பயிற்சி பாசறை நடந்தது. நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.

பயிற்சி பாசறைக்கு தெற்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் சி.என்.அண்ணாதுரை எம்.பி. தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் எவரஸ்ட் என்.நரேஷ்குமார் வரவேற்று பேசினார்.

பயிற்சி பாசறையில் பொதுப்பணி மற்றும் நெடுஞ் சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு பேசினார்.

இன்று மாலை திருவண்ணாமலை அருணை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பாராகிளினிக் கட்டிடம் மற்றும் இருதய அறுவை சிகிச்சை அரங்கம் திறப்பு விழாவில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.

மாலை 5 மணியளவில் திருவண்ணாமலை-திருக்கோவிலூர் ரோடு சாரோனில் உள்ள திருவண்ணாமலை தெற்கு மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் 60 அடி உயரமுள்ள கட்சி கொடியை ஏற்றி வைக்கிறார்.

பின்னர் மாலை 5.30 மணியளவில் திருவண்ணாமலை திருக்கோவிலூர் சாலை கலைஞர் திடலில் நகர்புற, ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு, கட்சி மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழா மற்றும் நலஉதவிகள் வழங்கும் விழா நடைபெறவுள்ளது.

நிகழ்ச்சிக்கு பொதுப்பணித் துறை அமைச்சரும், உயர் நிலை செயல்திட்டக்குழு உறுப்பினருமான எ.வ.வேலு தலைமை வகிக்கிறார். மாநாட்டில் கலந்து கொண்டு கட்சி முன்னோடிகளுக்குபொற்கிழி வழங்கியும், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியும் இளைஞர் அணி செயலாளர் உதயநிதிஸ்டாலின் பேசுகிறார்.

Similar News