ஓட்டலில் நெருக்கமாக இருந்த வீடியோவை காட்டி காதலியிடம் நகை-பணம் பறித்த கட்டிட மேஸ்திரி
- நாங்கள் 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும் செல்போன் மூலமாக பேசியும் எங்களது காதலை வளர்த்து வந்தோம்.
- நான் ஜெயபிரகாஷிடம் என்னை திருமணம் செய்யும்படி கூறினேன்.
கோவை:
கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள வரதராஜ புரத்தை சேர்ந்தவர் 22 வயது இளம்பெண். இவர் கோவை கிழக்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-
நான் காளப்பட்டியில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வருகிறேன். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு கவுண்டம்பாளையம் அருகே உள்ள இடையர்பாளையத்தை சேர்ந்த கட்டிட மேஸ்திரி ஜெயபிரகாஷ் (வயது 24) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. நாங்கள் 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும் செல்போன் மூலமாக பேசியும் எங்களது காதலை வளர்த்து வந்தோம். என்னை ஜெயபிரகாஷ் பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு அழைத்து சென்றார். அப்போது அவர் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி என்னை பாலியல் பலாத்காரம் செய்தார். நாங்கள் ஜாலியாக இருக்கும்போது அவர் எனக்கு தெரியாமல் அவரது செல்போனில் வீடியோ எடுத்து வைத்து இருந்தார்.
மேலும் அவர் கோவையில் உள்ள பல்வேறு ஓட்டல்களுக்கும் என்னை அழைத்து சென்று ஜாலியாக இருந்தார். நாங்கள் திருமணம் செய்து கொள்வோம் என்ற எண்ணத்தில் நான் இதற்கு சம்மதம் தெரிவித்தேன்.
பின்னர் நான் ஜெயபிரகாஷிடம் என்னை திருமணம் செய்யும்படி கூறினேன். ஆனால் அவர் ஜாதகம் பொருத்தவில்லை என காரணம் காட்டி என்னை திருமணம் செய்ய மறுத்து விட்டார். மேலும் அவர் என்னிடம் நீ திருமணம் செய்ய வலியுறுத்தினால் 2 பேரும் ஜாலியாக இருந்த ஆபாச வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக என்னை மிரட்டினார்.
மேலும் அவர் சமூக வலைதளங்களில் வீடியோவை வெளியிடாமல் இருக்க வேண்டும் என்றால் பணம் தர வேண்டும் என மிரட்டி கொலை மிரட்டல் விடுத்தார். இதனால் பயந்த நான் ஆபாச வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடாமல் இருக்க முதல் கட்டமாக ரூ.70 ஆயிரம் பணம் கொடுத்தேன். தொடர்ந்து அவர் மிரட்டி வந்ததால் மீண்டும் நான் அணிந்து இருந்த 3 பவுன் செயினை அவரிடம் கொடுத்தேன். என்னிடம் பணம் மற்றும் செயினை பெற்றுக்கொண்ட பின்னரும் தொடர்ந்து சமூக வலைதளத்தில் ஜாலியாக இருக்கும் வீடியோவை வெளியிட்டு விடுவதாக மிரட்டி பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுக்கிறார்.
பணம், செயினை பறித்த பின்னரும் தொடர்ந்து என்னை மிரட்டி வரும் ஜெயபிரகாஷ் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த புகாரில் கூறியிருந்தார்.
புகாரின் பேரில் கோவை கிழக்கு அனைத்து மகளிர் போலீசார் ஜெயபிரகாஷ் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.