தமிழ்நாடு செய்திகள்

அரசு பள்ளியில் பள்ளி செல்லா குழந்தைகள் விபரம் சேகரிப்பு

Published On 2023-07-12 12:39 IST   |   Update On 2023-07-12 12:39:00 IST
  • பொன்னேரி பாலாஜி நகரில் உள்ள அரசினர் நடுநிலை பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
  • பள்ளிக்கு செல்லாமல் சுற்றிய மாணவர்கள் 3 பேர் ஆரணி ஆற்றின் புதரில் ஓடி மறைந்தனர்.

பொன்னேரி:

பொன்னேரி பாலாஜி நகரில் உள்ள அரசினர் நடுநிலை பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் பள்ளியின் வளர்ச்சி குறித்து பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது. அப்போது பாலாஜி நகர், கள்ளுக்கடை மேடு உள்ளிட்ட பகுதிகளில் 15-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தொடர்ந்து பள்ளிக்கு வருவதில்லை என்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து நகராட்சி தலைவர் பரிமளம் விஸ்வநாதன், பள்ளி ஆசிரியை குளோரி, கவுன்சிலர் மோகனா மற்றும் பள்ளி மேலாண்மை குழுவினர் பள்ளி செல்லா குழந்தைகளின் விபரத்தை சேகரிக்க சென்றனர். அப்போது பள்ளிக்கு அருகில் உள்ள நெல் அரிசி ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் குழந்தைகள் மற்றும் பாலாஜி நகர் அருகில் உள்ள கள்ளுக்கடை பகுதியில் வசிக்கும் பழங்குடியினரிடம் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புமாறு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது பள்ளிக்கு செல்லாமல் சுற்றிய மாணவர்கள் 3 பேர் ஆரணி ஆற்றின் புதரில் ஓடி மறைந்தனர். பின்பு சாக்லேட் கொடுத்து வரவழைத்து பள்ளிக்கு அழைத்து சென்றனர்.

Tags:    

Similar News