தமிழ்நாடு

அனுமதியில்லாத இடங்களில் கால்நடைகளை வெட்ட அனுமதிக்கக்கூடாது- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

Published On 2023-02-10 08:48 GMT   |   Update On 2023-02-10 08:48 GMT
  • கோவில் திருவிழாக்கள், கிராம பஞ்சாயத்து வழங்கும் பொது இறைச்சிக்கூடம் தவிர வேறு இடங்களில் கால்நடைகளை வெட்டுவது குற்றம்.
  • உரிய உரிமம் பெறாமல் மாட்டிறைச்சி கடை நடத்துவது குறித்து 3 வாரங்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மதுரை:

கன்னியாகுமரி மாவட்டம் மாதவாலயம் பகுதியை சேர்ந்த சையத் அலி பாத்திமா மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், நான் மாதவாலயம் கிராமத்தில் வசித்து வருகிறேன்.

எனது வீட்டின் அருகே அனுமதியின்றி மாட்டிறைச்சி கடை நடத்தப்படுகிறது. இந்த மாட்டிறைச்சி கடையால் எங்கள் குடியிருப்பு பகுதி மக்கள் மிகவும் சிரமமாக உள்ளது. எனவே இந்த மாட்டிறைச்சி கடையை வேறு இடத்திற்கு மாற்ற உரிய உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமி நாதன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

கிராம பஞ்சாயத்து தரப்பில், மாட்டிறைச்சி கடை வைத்திருப்பவர், ஒரு கோழி இறைச்சி கடை நடத்துவதற்கு மட்டுமே உரிமம் பெற்றுள்ளார். ஆனால் மாட்டிறைச்சி மற்றும் ஆட்டிறைச்சி கடை நடத்துகிறார் என தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து நீதிபதி, உள்ளாட்சி அமைப்புகளால் வழங்கப்பட்ட உரிமம் இல்லாமல், எந்த ஒரு நபரும், எந்த இடத்திலும் கால்நடைகள், செம்மறி ஆடு, பன்றி ஆகியவற்றை வெட்ட அனுமதிக்கக்கூடாது. கோவில் திருவிழாக்கள், கிராம பஞ்சாயத்து வழங்கும் பொது இறைச்சிக்கூடம் தவிர வேறு இடங்களில் கால்நடைகளை வெட்டுவது குற்றம்.

மேலும் இந்த வழக்கில் உள்ளாட்சி அமைப்பின் உரிய உரிமம் பெறாமல், மாட்டிறைச்சி கடை நடத்தி வருவதாக உள்ளாட்சி தரப்பு வக்கீல் கூறியுள்ளார். எனவே உரிமம் பெறாமல் மாட்டிறைச்சி கடை நடத்துவது குறித்து, தோவாளை வட்டார வளர்ச்சி அலுவலர் 3 வாரங்களுக்குள் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

Tags:    

Similar News