தமிழ்நாடு

சொத்து வரியை மீண்டும் 6 சதவீதம் உயர்த்த முடிவா? அச்சத்தில் பொதுமக்கள்

Published On 2023-04-09 06:17 GMT   |   Update On 2023-04-09 06:27 GMT
  • அரசாணையில் குறிப்பிடப்பட்டது போல் சொத்துவரி உயர்த்தப்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் பொது மக்கள் உள்ளனர்.
  • சொத்துவரியை உயர்த்தினால் வீட்டு வாடகையையும் உயர்த்த வேண்டிய நிலை ஏற்படும்.

சென்னை:

தமிழகத்தில் 20 மாநகராட்சிகள், 124 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் உள்ளன. இவற்றில் கடந்த 1998-ம் ஆண்டு கடைசியாக சொத்துவரி உயர்த்தப்பட்டது. அதன்பிறகு சொத்துவரி உயர்த்தப்படவில்லை.

இந்நிலையில் விலைவாசி உயர்வு, பணியாளர்களின் ஊதிய உயர்வு, பொது மக்களுக்கான அடிப்படை தேவைகளை நிறைவேற்றுதல், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்தி பராமரித்தல் போன்றவற்றுக்கு கூடுதல் செலவானது. இதை கருத்தில் கொண்டு கடந்த ஆண்டு சொத்துவரி சீராய்வு செய்யப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக கடந்த ஆண்டு சொத்து வரி உயர்த்தப்பட்டது. 25 சதவீதம், 50 சதவீதம், 75 சத வீதம், 100 சதவீதம் என 4 வகைகளாக சொத்துவரி உயர்த்தப்பட்டது. காலி மனைக்கு சொத்துவரி 100 சதவீதம் உயர்த்தப்பட்டது.

மேலும் ஒவ்வொரு ஆண்டும் 6 சதவீதம் சொத்துவரி உயர்த்தப்படும் என்று அரசாணையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் கடந்த ஏப்ரல் 1-ந்தேதி முதல் புதிய நிதியாண்டு தொடங்கி உள்ள நிலையில் சொத்துவரி 6 சதவீதம் உயர்த்தப்படுமா என்ற கேள்வி பொது மக்களிடம் எழுந்துள்ளது. அரசாணையில் குறிப்பிடப்பட்டது போல் சொத்துவரி உயர்த்தப்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர்.

கடந்த ஆண்டு சொத்து வரி பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் உடனே சொத்து வரியை உயர்த்தக்கூடாது என்று பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

மேலும் மின்கட்டண உயர்வும் பொதுமக்களை பாதித்துள்ளது. இந்நிலையில் மீண்டும் சொத்து வரி உயர்வு என்றால் அதை தாங்கிக் கொள்ள முடியாது என்று பொதுமக்கள் கூறுகிறார்கள். சொத்துவரியை உயர்த்தினால் வீட்டு வாடகையையும் உயர்த்த வேண்டிய நிலை ஏற்படும்.

எனவே அனைத்து தரப்பு மக்களும் இதனால் பாதிக்கப்படுவார்கள் என்பதால் சொத்துவரி உயர்வை இந்த ஆண்டு கைவிட வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

Tags:    

Similar News