தமிழ்நாடு

கதவை உடைத்து கோவிலுக்குள் நுழைந்த பாகுபலி யானை

மேட்டுப்பாளையம் அருகே கதவை உடைத்து கோவிலுக்குள் நுழைந்த பாகுபலி யானை

Published On 2023-06-22 09:10 GMT   |   Update On 2023-06-22 09:10 GMT
  • பெருமாள் கோவில் அருகே சென்ற யானை, கோவில் மண்டபத்தில் முன்பக்க கதவை உடைத்து கோவிலுக்குள் சென்றது.
  • பாகுபலி யானையை அடர் வனப்பகுதிக்குள் விரட்ட மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேட்டுப்பாளையம்:

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனசரகத்திற்குட்பட்ட பகுதிகளில் ஏராளமான காட்டு யானைகள், காட்டெருமை, மான் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.

இவை அவ்வப்போது, இரை, தண்ணீர் தேடி வனத்தை விட்டு வெளியேறி வனப்பகுதியையொட்டிய ஊருக்குள் புகுந்து விளைநிலங்களை சேதம் செய்வதோடு, மனிதர்களையும் அச்சுறுத்தி வருகிறது.

கடந்த 3 ஆண்டுகளாக மேட்டுப்பாளையம், ஓடந்துறை, தாசம்பாளையம், சமயபுரம் பகுதிகளில் மக்களால் பாகுபலி என செல்லமாக அழைக்கப்படும் ஒற்றை காட்டு யானை சுற்றி வருகிறது.

இந்த யானை அடிக்கடி வனத்தை விட்டு வெளியேறி ஊருக்குள்ளேயே சுற்றி திரிந்து வருகிறது. இந்த யானையானது வனத்தை விட்டு வெளியேறி சமயபுரம் பகுதியில் சாலையை கடந்து அருகே உள்ள தாசம்பாளையம், கிட்டாம்பாளையம், குரும்பனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நுழைந்து வருகிறது.

அவ்வாறு நுழையும் காட்டு யானை பகல் முழுவதும் அந்த பகுதிகளில் உள்ள விளைநிலங்களில் சுற்றி திரிந்து தனது பசியினை தீர்த்துக் கொள்கிறது.

பின்னர் மாலையில் வழக்கம்போல மீண்டும் சமயபுரம் வழியாக சாலையை கடந்து வனத்திற்குள் சென்று விடுகிறது.

நீண்ட தந்தங்களுடனும், பிரம்மிப்பூட்டும் அதன் பிரமாண்ட உருவமும் கொண்ட பாகுபலி யானையைக் கண்டு சமயபுரம், தாசம்பாளையம், கிட்டாம்பாளையம், குரும்பனூர் பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

இருப்பினும் பாகுபலி யானை இதுவரை யாருக்கு எந்தவித தொந்தரவு கொடுத்ததும் இல்லை. யாரையும் தாக்கியதும் இல்லை. தற்போது யானையானது மூர்க்கத்தனத்துடன் சுற்றி வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று அதிகாலை நேரத்தில் தாசம்பாளையம் பகுதியில் பாகுபலி யானை சுற்றி திரிந்தது.

அப்போது அங்குள்ள பெருமாள் கோவில் அருகே சென்ற யானை, கோவில் மண்டபத்தில் முன்பக்க கதவை உடைத்து கோவிலுக்குள் சென்றது.

பின்னர் அங்கு சிறிது நேரம் சுற்றி விட்டு, மீண்டும் வெளியில் வந்த யானை அங்கிருந்து வனத்தை நோக்கி சென்றது.

இந்த காட்சிகள் கோவிலில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இதனை கோவில் நிர்வாகத்தினரும், பக்தர்களும் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

தற்போது கோவில் கேட்டை உடைத்து பாகுபலி யானை கோவிலுக்குள் நுழையும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த பாகுபலி யானையை அடர் வனப்பகுதிக்குள் விரட்ட மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளனர்.

தற்போதும் இதே கோரிக்கையை மக்கள் வனத்துறையினருக்கு வைத்துள்ளனர். இதுவரை கண்டுகொள்ளாத வனத்துறையினர் இனிமேலாவது நடவடிக்கை எடுப்பார்கள் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags:    

Similar News