தமிழ்நாடு
மேலப்பாளையத்தில் கடைகள் மற்றும் ஓட்டல்கள் அடைக்கப்பட்டிருந்த காட்சி.

பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு மேலப்பாளையத்தில் கடைகள் அடைப்பு

Published On 2023-12-06 10:14 GMT   |   Update On 2023-12-06 10:14 GMT
  • நெல்லை மாநகரில் மட்டும் சுமார் 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
  • மேலப்பாளையத்தில் சுமார் 1,000-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டன.

நெல்லை:

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதையொட்டி கடந்த 3 நாட்களாகவே போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நெல்லை மாநகரில் இன்று பாதுகாப்பு வந்த போலீசார், ஊர்க்காவல் படையினர் ஆகியோர் வண்ணார்பேட்டை ரவுண்டானாவில் அதிகாலையில் நிறுத்தப்பட்டு அங்கிருந்து தேவைக்கேற்ப பிரித்து அனுப்பப்பட்டனர். மேலப்பாளையம் பகுதியில் கூடுதலாக போலீசார் பாதுகாப்புக்காக அனுப்பப்பட்டிருந்தனர்.

நெல்லை புதிய பஸ் நிலையம், ரெயில் நிலையம், நெல்லையப்பர் கோவில், டவுன் ரதவீதிகள், முக்கிய வழிப்பாட்டு தலங்கள், மேலப்பாளையம் ரவுண்டானா என முக்கிய இடங்களில் கூடுதல் போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டனர். நெல்லை மாநகரில் மட்டும் சுமார் 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

மேலப்பாளையத்தில் சுமார் 1,000-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டன. இதன் காரணமாக மேலப்பாளையம் சந்தை பகுதிகள், பஜார்வீதி, அண்ணா வீதி, அம்பை சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகள் கடைகள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன. மேலும் எஸ்.டி.பி.ஐ., தமிழக முஸ்லீம் முன்னேற்ற கழகம், ஐக்கிய முஸ்லீம் முன்னேற்ற கழகம் ஆகியவை சார்பில் பாபர் மசூதி இடிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மேலப்பாளையம் சந்தை ரவுண்டானா பகுதியில் இன்று காலை எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில துணைத்தலைவர் அப்துல் ஹமீது, மாநில பேச்சாளர் பேட்டை முஸ்தபா ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் மாவட்ட தலைவர் சாகுல் ஹமீது உஸ்மானி, பொதுச்செயலாளர் கனி மற்றும் நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர். இதேபோல் பாளை அரசு சித்த மருத்துவக்கல்லூரி முன்பு த.மு.மு.க. சார்பில் வழிபாட்டு தலங்களை பாதுகாக்க கோரி மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களிலும் போலீசார், ஆயுதப்படை போலீசார் மற்றும் ஊர்காவல் படையினர் என மொத்தம் 4 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். நெல்லை மாநகரில் போலீஸ் கமிஷனர் மகேஷ்வரி தலைமையிலும், நெல்லை மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் தலைமையில் ஏர்வாடி, களக்காடு, பத்தமடை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Tags:    

Similar News