தமிழ்நாடு

ஆழியார் அணை திறப்பு- கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

Published On 2022-08-04 09:58 GMT   |   Update On 2022-08-04 09:58 GMT
  • 120 அடி கொண்ட ஆழியார் அணையின் நீர்மட்டம் 118 அடியை தொடர்ந்து, அணையின் பாதுகாப்பு கருதி இன்று காலை அணை திறக்கப்பட்டது.
  • ஆழியார் ஆற்றில் உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளதால், ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

ஆனைமலை:

பொள்ளாச்சியை அடுத்துள்ள மேற்கு தொடர்ச்சி மலைகளில் கடந்த ஜூலை மாதம் முதலே தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து பெய்து வந்தது.

இந்நிலையில், கடந்த சில தினங்களாக மேற்கு தொடர்ச்சி மலைகளையொட்டிய வால்பாறை, காடம்பாறை, அப்பர் ஆழியாறு போன்ற பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக பரம்பிக்குளம் ஆழியார் பாசன திட்டத்தின் முக்கிய அணைகளான, பரம்பிக்குளம் மற்றும் ஆழியாறு அணை பகுதிகளுக்கு நீர் வரத்து அதிகரித்தது.

இந்நிலையில் நேற்று இரவு விடிய விடிய பெய்த மழையின் காரணமாக அப்பர் ஆழியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.

இதனால் ஆழியார் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது. இதனால் அணையின் நீர்மட்டமும் கிடுகிடுவென உயர்ந்தது. மொத்த அடியான 120 அடியில் 118 அடியை அணை எட்டியது. ஏற்கனவே அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்ததால், வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

120 அடி கொண்ட ஆழியார் அணையின் நீர்மட்டம் 118 அடியை தொடர்ந்து, அணையின் பாதுகாப்பு கருதி இன்று காலை அணை திறக்கப்பட்டது.

அணையின் 11 மதகுகளும் திறக்கப்பட்டு, அணையில் இருந்து வினாடிக்கு 3850 கன அடி உபநீர் வெளியேற்றப்பட்டது. ஆழியார் ஆற்றில் உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளதால், ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

ஆழியார் ஆற்றின் கரையோரத்தில் உள்ள ஆனைமலை, அம்பராம்பாளையம், ஆத்து பொள்ளாச்சி, கோபாலபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கரையோர கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News