தமிழ்நாடு

ஆவின் நெய் லிட்டருக்கு ரூ.45 உயர்ந்தது- இன்று முதல் நடைமுறைக்கு வந்தது

Published On 2022-07-21 04:57 GMT   |   Update On 2022-07-21 06:49 GMT
  • தயிர், மோர், லஸ்சிக்கு தான் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டது. ஆனால் நெய் விலையையும் உயர்த்தி விட்டனர்.
  • விலை உயர்வுக்கு தமிழ்நாடு பால் முகவர்கள், தொழிலாளர் நலச்சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

சென்னை:

தயிர், லஸ்சி, மோர் உள்ளிட்ட பால் பொருட்களுக்கு மத்திய அரசு 5 சதவீத ஜி.எஸ்.டி. வரி விதித்துள்ளது. இதனைத் தொடர்ந்து அனைத்து தனியார் பால் நிறுவனங்களும் தயிர் பாக்கெட்ட்டிற்கான விலையை ரூ.4 முதல் ரூ.10 வரை உயர்த்தியது.

இந்த நிலையில் ஆவின் நிறுவனமும் தயிர், நெய், லஸ்சி, மோர் ஆகிய பால் பொருட்களுக்கு இன்று முதல் விலையை உயர்த்தி அறிவித்துள்ளது.

ஆவின் நெய் லிட்டருக்கு ரூ.45 உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே ரூ.535 ஆக இருந்த நெய் பாட்டில் இன்றுமுதல் ரூ.580 ஆக அதிகரித்துள்ளது. அரை லிட்டர் நெய் பாட்டில் ரூ.15-ம், 200 மில்லி நெய் ரூ.10-ம், 100 மில்லி ரூ.5-ம் உயர்ந்தது. 5 லிட்டர் நெய் ரூ.2,900, 15 கிலோ ரூ.9,680 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இதேபோல் ஆவின் தயிர் விலை 500 மில்லி பாக்கெட் ரூ.30-ல் இருந்து ரூ.35 ஆகவும், 200 மில்லி ரூ.18 ஆகவும், 400 கிராம் பிரிமியம் கப் தயிர் ரூ.40-ல் இருந்து 50 ஆகவும், பிரிமியம் தயிர் ஒரு கிலோ ரூ.100-ல் இருந்து ரூ.120 ஆகவும் அதிகரித்துள்ளது. 50 கிராம் தயிர் விலை உயர்த்தப்படாமல் ரூ.5-க்கு விற்கப்படுகிறது.

200 மில்லி பாக்கெட் லஸ்சி ரூ.20, புரோபயோடிக் லஸ்சி ரூ.27-ல் இருந்து ரூ.30 ஆகவும், 200 மில்லி மோர் ரூ.15-ல் இருந்து ரூ.18 ஆகவும், 200 மில்லி மோர் பாட்டில் ரூ.10-ல் இருந்து ரூ.12 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த விலை உயர்வு இன்று முதல் அனைத்து ஆவின் விற்பனை மையங்கள் மற்றும் முகவர் மையங்களில் நடைமுறைக்கு வந்தது.

இந்த விலை உயர்வுக்கு தமிழ்நாடு பால் முகவர்கள், தொழிலாளர் நலச்சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சங்க தலைவர் பொன்னுசாமி கூறியதாவது:-

தயிர், மோர், லஸ்சிக்கு தான் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டது. ஆனால் நெய் விலையையும் உயர்த்தி விட்டனர். கடந்த மார்ச் மாதம் தான் நெய் விலை உயர்த்தப்பட்டது. இப்போது மீண்டும் கிலோவுக்கு ரூ.45 வரை உயர்த்தி உள்ளனர்.

பால் கொள்முதல் விலையை உயர்த்தாமலேயே நெய், தயிர், லஸ்சி, மோர் விலையை உயர்த்தி இருப்பது பொதுமக்களை பாதிக்கும். இந்த விலை உயர்வை திரும்ப பெற வேண்டும். மேலும் இந்த விலை உயர்வு உடனே அமலாக்கப்பட்டுள்ளதால் முகவர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News