தமிழ்நாடு செய்திகள்

வேடந்தாங்கல் சரணாலயத்துக்கு 5 ஆயிரம் வெளிநாட்டு பறவைகள் வருகை

Published On 2022-11-15 12:34 IST   |   Update On 2022-11-15 12:34:00 IST
  • அக்டோபர் மாதம் இரண்டாவது வாரத்தில் இந்தியாவில் வாழுகின்ற பறவைகள் தவிர அரிய வகை வெளிநாட்டு பறவையினங்களும் சரணாலயத்திற்கு வரும்.
  • சரணாலயத்திற்கு வாத்து இனங்களான சிரவி வாத்து, புள்ளி மூக்கு வாத்து ஆகிய இரண்டு வகை வந்துள்ளன.

மதுராந்தகம்:

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் மிகவும் புகழ்பெற்றது. இங்கு வரும் வெளிநாட்டு பறவைகளை கண்டு ரசிக்க தனி சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டுவர். இந்த சரணாலயம் வேடந்தாங்கலில் உள்ள ஏரி மற்றும் ஏரியில் உள்ளே நீரில் வளரக்கூடிய மரங்களைக் கொண்டு இயற்கையான சூழலில் அமைந்துள்ளது.

இந்த ஆண்டு பெய்த பருவமழையின் காரணமாக 16 அடி உயரமுள்ள வேடந்தாங்கல் ஏரி 15.5 அடி வரையில் நிரம்பி உள்ளது.

பறவையினங்களுக்கு தேவையான இயற்கையான சூழல், தட்பவெப்ப நிலை, உணவு உள்ளிட்ட ரம்மியமான சூழ்நிலை நிலவி வருகிறது. இதன் காரணமாக சரணாலயத்துக்கு வரும் வெளிநாட்டு பறவைகளின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கி உள்ளது. தற்போது வரை சுமார் 5 ஆயிரம் பறவைகள் வந்துள்ளன.

அக்டோபர் மாதம் இரண்டாவது வாரத்தில் இந்தியாவில் வாழுகின்ற பறவைகள் தவிர அரிய வகை வெளிநாட்டு பறவையினங்களும் சரணாலயத்திற்கு வரும். தற்போது அக்டோபர் முதல் வாரம் முதல் வடகிழக்கு பருவ மழை தொடங்கி தொடர்ந்து பெய்து வருவதால் பறவைகளின் எண்ணிக்கை வருகை உயர்ந்துள்ளது. தற்போது சரணாலயத்தில் 15 வகையான இந்தியாவில் வாழுகின்ற பறவைகள் மற்றும் வெளிநாட்டு அரிய வகை பறவை இனங்கள் வந்துள்ளன. இதில் இந்தியாவில் வாழ்கின்ற குருட்டு கொக்கு, உன்னி கொக்கு, வெள்ளை கொக்கு, சிறிய நீர்காகம் உள்ளிட்ட வெளிநாட்டு அரிய பறவை இனங்களான வெளிர் உடல் அரிவாள் மூக்கன், நத்தக்குத்தி நாரை, சாம்பல் நாரை, கூழை கிடா, கரண்டிவாயன், தட்ட வாயன், பெரிய நீர்க்காகம், மிளிர் உடல் அரிவாள் மூக்கன், பெரிய நீர் காகம் உள்ளிட்ட பறவை இனங்கள் உள்ளன.

மேலும் சரணாலயத்திற்கு வாத்து இனங்களான சிரவி வாத்து, புள்ளி மூக்கு வாத்து ஆகிய இரண்டு வகை வந்துள்ளன. இந்த பறவைகள் பாகிஸ்தான், சைபீரியா பர்மா, ஸ்ரீலங்கா, வங்காள தேசம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் வருகை தந்து மீண்டும் குஞ்சு பொறித்து தங்கள் நாடுகளுக்கே திரும்பி சென்று விடும்.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறும்போது, வேடந்தாங்கல் சரணாலயத்துக்கு இதுவரை 5 ஆயிரம் பறவைகள் வந்துள்ளன. தற்போது வந்துள்ள 10-க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் ஏரியில் உள்ள மரங்களில் கூடுகட்ட தொடங்கி இருக்கிறது. மீதமுள்ள 5 -க்கும் மேற்பட்ட அரியவகை பறவை இனங்கள் இன்னும் வரும். இதனை சுற்றுலா பயணிகள் ரசித்து பார்க்கலாம் என்றார்.

Tags:    

Similar News