தமிழ்நாடு
தங்கமணியின் உறவினர்கள் கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட காட்சி

திருவண்ணாமலையில் விசாரணை கைதி மரணம்- கலெக்டர் அலுவலகத்தில் உறவினர்கள் முற்றுகை

Published On 2022-04-28 06:45 GMT   |   Update On 2022-04-28 06:45 GMT
கைதி மரணமடைந்த சம்பவத்தால் மனைவி மலர் மற்றும் உறவினர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தன் கணவரை போலீசார் அடித்து கொலை செய்து விட்டதாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை:

திருவண்ணாமலை அடுத்த இளையாங்கண்ணி தட்டறையை கிராமத்தை சேர்ந்தவர் தங்கமணி (வயது48). நேற்று முன்தினம் திருவண்ணாமலை மாவட்ட கலால் போலீசார் கள்ளச்சாராயம் விற்றதாக தங்கமணியை கைது செய்தனர். இதையடுத்து அவரை திருவண்ணாமலை சப் ஜெயிலில் அடைத்தனர்.

இந்த நிலையில் தங்கமணிக்கு உடல்நிலை சரியில்லாமல் ஆனது. இதையடுத்து தங்கமணியை திருவண்ணாமலை அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த நிலையில் நேற்று மாலை தங்கமணி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவரது உறவினருக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த அவரது மனைவி மலர் மற்றும் உறவினர்கள் இன்று காலை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தன் கணவரை போலீசார் அடித்து கொலை செய்து விட்டதாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தங்கமணி தற்போது கள்ளச்சாராயம் விற்பது இல்லை அவரை கைது செய்வதற்கு முன்பே எங்களிடம் பேரம் பேசினார்கள். நாங்கள் அதற்கு ஒத்துழைக்காத காரணத்தால் அவரை கைது செய்துள்ளனர். நேற்று மாலை தங்கமணி திடீரென உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டார்.

அவரது உடலை கையெழுத்து போட்டுவிட்டு பெற்று செல்லுங்கள் தங்களுக்கு எவ்வளவு பணம் தேவையோ நாங்கள் தருகிறோம் இதை வெளியில் பெரிதுபடுத்த வேண்டாம் என போலீசார் எங்களிடம் தெரிவித்தனர்.

இதற்கு நாங்கள் சம்மதிக்கவில்லை இறந்து போன உயிர் மீண்டும் வருமா? என்று அவர்கள் ஆவேசமாக கேள்வி எழுப்பினர். தொடர்ந்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. 
Tags:    

Similar News