தமிழ்நாடு
தமிழக கவர்னர்

கவர்னர் ஆர்.என்.ரவி இன்று வருகை- 5 மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் பலத்த பாதுகாப்பு

Published On 2022-04-23 05:50 GMT   |   Update On 2022-04-23 05:50 GMT
தொடர்ந்து ஒருவாரம் ஊட்டியில் தங்கும் தமிழக கவர்னர் 30-ந் தேதி மீண்டும் சென்னை திரும்புகிறார்.
கோவை:

நீலகிரி மாவட்டம் ஊட்டி ராஜ்பவன் மாளிகையில் தமிழக பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கும் 2 நாள் மாநாடு நாளை மறுநாள்(திங்கட்கிழமை) மற்றும் 26-ந் தேதிகளில் நடக்கிறது.

இதில் பங்கேற்பதற்காகவும், ஒரு வார பயணமாகவும் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று மாலை நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு வருகிறார்.

இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு மதியம் 2 மணியளவில் கோவை விமான நிலையத்திற்கு வருகிறார். அங்கிருந்து கார் மூலம் சாலை மார்க்கமாக ஊட்டிக்கு பயணம் செய்கிறார். அங்கு ராஜ்பவன் மாளிகையில் தங்குகிறார்.

கவர்னர் ஆர்.என்.ரவி நாளை மறுநாள் காலை ராஜ்பவன் மாளிகையில் நடக்கும் துணைவேந்தர்கள் மாநாட்டை தொடங்கி வைத்து பேசுகிறார்.

தொடர்ந்து ஒருவாரம் ஊட்டியில் தங்கும் கவர்னர் 30-ந் தேதி மீண்டும் சென்னை திரும்புகிறார்.

கடந்த 19-ந் தேதி கவர்னர் ஆர்.என்.ரவி மயிலாடுதுறை அருகே உள்ள தருமபுரம் ஆதீன விழாவில் பங்கேற்பதற்காக காரில் சென்றபோது, சாலையோரம் நின்றிருந்தவர்கள் அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.

அதேபோன்று நீலகிரி வரும் கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து விமான நிலையம் முன்பு கருப்புகொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட போவதாக முற்போக்கு அமைப்புகள் அறிவித்திருந்தது.

இதையடுத்து, கோவை, நீலகிரி மாவட்டங்களில் கவர்னரின் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டன.

கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, சேலம் உள்ளிட்ட 5 மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் கோவை மாநகர் மற்றும் புறநகரில் 2 ஆயிரம் போலீசாரும், நீலகிரியில் 600 போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதுதவிர விமான நிலையம், பஸ் நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

இதற்கிடையே கவர்னரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புகொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்த தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட முற்போக்கு அமைப்புகள் தங்களது போராட்டதை வாபஸ் வாங்கியுள்ளது.

இது தொடர்பாக தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் கூறும்போது, சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு கருதி போலீசார் இந்த போராட்டத்திற்கு அனுமதி மறுத்து விட்டனர். இதன் காரணமாக நாங்கள் இந்த போராட்டத்தை வாபஸ் பெற்று கொள்வதாக தெரிவித்தார்.
Tags:    

Similar News