தமிழ்நாடு செய்திகள்
வழக்கு பதிவு

ரூ.45 ஆயிரத்துக்கு ஆண் குழந்தை விற்பனை- விருதுநகர் தம்பதி உள்பட 6 பேர் மீது வழக்கு

Published On 2022-03-18 10:24 IST   |   Update On 2022-03-18 10:24:00 IST
ரூ.45 ஆயிரத்துக்கு ஆண் குழந்தை விற்பனை செய்த தம்பதி உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர்:

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள அப்பையநாயக்கன் பட்டியை சேர்ந்தவர் சுந்தரலிங்கம். இவரது மனைவி கோமதி.

இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் குழந்தை இல்லை. இதே ஊரை சேர்ந்தவர் மகேஸ்வரி. இவருக்கு திருமணமாகி சேலம் மாவட்டம் ஏற்காடு தாலுகாவில் உள்ள புளியங்காடை பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் மகேஸ்வரி சொந்த ஊருக்கு வந்தார். அப்போது கோமதியை சந்தித்தார். அவரிடம் தனக்கு குழந்தை இல்லாதது பற்றி கோமதி வேதனைபட்டார்.

இதனை கேள்விபட்ட மகேஸ்வரி தனது கணவரின் சகோதரர் அண்ணா மலைக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ள நிலையில் 3-வதாகவும் ஆண் குழந்தை பிறந்து இருப்பதாகவும், அதனை வளர்க்க கஷ்டப்படுவதாகவும் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து அந்த குழந்தையை சுந்தரலிங்கம் -கோமதி தம்பதிக்கு விற்பது தொடர்பாக மகேஸ்வரி தனது குடும்பத்தினரிடம் பேசினார். குழந்தையின் பெற்றோர் அண்ணாமலை -அம்பிகா இதற்கு ஒப்பு கொண்டனர்.

இதுபற்றி சுந்தரலிங்கம் தம்பதிக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் ஏற்காடு தாலுகா புளியங்காடை சென்று அண்ணாமலை தம்பதியரிடம் பேசினார்.

அதன் பிறகு கடந்த 9.12.2019 அன்று 2 நபர்கள் மூலம் ரூ.45 ஆயிரத்துக்கு அண்ணாமலை-அம்பிகா தம்பதியினர் குழந்தையை விற்றுள்ளனர். சுந்தர லிங்கம்-கோமதி குழந்தையை பெற்று கொண்டு ஊர் திரும்பினர்.

இந்த சம்பவம் தொடர்பாக விருதுநகர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மீனாட்சிக்கு தகவல் கிடைத்தது. அவர் இதுகுறித்து அப்பயநாயக்கன்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில்தான் குழந்தை விற்பனை குறித்த தகவல்கள் கிடைத்தன.

இதனை தொடர்ந்து சுந்தரலிங்கம்-கோமதி, அண்ணாமலை உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News