தமிழ்நாடு செய்திகள்
ஆர்வமுடன் வாக்களித்த வாக்காளர்.

வேட்பாளர் சின்னத்தில் குளறுபடி: ஜெயங்கொண்டம் நகராட்சி 16-வது வார்டில் மறுவாக்குப்பதிவு

Published On 2022-02-21 09:53 IST   |   Update On 2022-02-21 09:53:00 IST
ஜெயங்கொண்டம் நகராட்சியில் உள்ள 16-வது வார்டில் ஆண்கள் மற்றும் பெண்கள் என இரு வாக்குச்சாவடிகளிலும் இன்று மறுவாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது.
அரியலூர்:

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உட்பட்ட 16-வது வார்டுக்கு இன்று மறுவாக்குப்பதிவு நடைபெற்றது.

ஜெயங்கொண்டம் நகராட்சியில் உள்ள 21 வார்டுகளுக்கு மொத்தம் 108 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதற்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. ஜெயங்கொண்டம் நகராட்சியில் மொத்தமுள்ள 28,042 வாக்காளர்களில் 21,435 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். இது 76.44 சதவீதமாகும்.

இந்தநிலையில், ஜெயங்கொண்டம் நகராட்சியில் உள்ள 16-வது வார்டுக்கு மறு தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் நேற்று உத்தரவிட்டது.

ஜெயங்கொண்டம் நகராட்சி 16-வது வார்டில் பிரதான கட்சிகளில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு வேட்பாளராக இதயராணி கை சின்னத்திலும், அ.தி.மு.க. வேட்பாளராக மலர்விழி இரட்டை இலை சின்னத்திலும், பா.ம.க. வேட்பாளராக இந்திராகாந்தி மாம்பழம் சின்னத்திலும் போட்டியிடுகிறார்கள்.

மேலும் அ.ம.மு.க. வேட்பாளராக ரோஸ்மா பிர‌ஷர் குக்கர் சின்னத்திலும், சுயேட்சை வேட்பாளர்களாக விஜயலட்சுமி மறை முருக்கி (ஸ்பேனர்) சின்னத்திலும், சுந்தராபாய் தீப்பெட்டி சின்னத்திலும் என 6 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

இதில் குறிப்பாக ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உட்பட்ட ஸ்டேட் பேங்க் காலணி, சீனிவாசா நகர், இந்திராநகர், ஜோதிபுரம், கருப்பையா நகர், சிதம்பரம் ரோடு, கல்வி கிராமம் உள்ளிட்ட பகுதிகள் அடங்கிய 16-வது வார்டில் 1,640 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 1,034 பேர் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற தேர்தலில் வாக்களித்துள்ளனர்.

இந்நிலையில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் விஜயலட்சுமி என்பவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள மறை முருக்கி (ஸ்பேனர் சின்னம்) அஞ்சல் வாக்குச்சீட்டுகளில் ஆணி சின்னமாக பதிவிடப்பட்டுள்ளதாகவும், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவு செய்யப்பட்ட மறை முருக்கி (ஸ்பேனர்) சின்னம் சரியாக பதிவிடப்படவில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இப்புகார் தேர்தல் ஆணையத்துக்கு சென்றதையடுத்து இந்த வார்டில் மறுவாக்குப் பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. மேலும் சனிக்கிழமை அன்று தேர்தல் நடைபெற்ற ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அதே இடத்தில் இன்று மறுவாக்குப்பதிவு நடத்திடவும் ஏற்பாடுகள் நடந்தன.

அதன்படி ஜெயங்கொண்டம் நகராட்சியில் உள்ள 16-வது வார்டில் ஆண்கள் மற்றும் பெண்கள் என இரு வாக்குச்சாவடிகளிலும் இன்று மறுவாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. கடந்த சனிக்கிழமை வாக்களித்தவர்கள் சிரமமாக கருதாமல் வாக்குச் சாவடிக்கு வந்து தங்களது வாக்கினை இரண்டாவது முறையாக பதிவு செய்தனர். இதனால் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தொடர்ந்து மாலை 5 மணி வரை பொதுவாக்காளர்களும், மாலை 5 முதல் 6 மணி வரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களும் வாக்குப்பதிவு செய்வதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது.

கடந்த சனிக்கிழமை நடைபெற்ற தேர்தலின்போது வாக்காளர்களுக்கு அடையாள மையானது வலது கை ஆட்காட்டி விரலில் வைக்கப்பட்டது. இன்று மறு வாக்குப் பதிவின்போது அழியாத மை இடது கை நடு விரலின் மீது வைக்கப்பட்டது.

மேற்கண்ட வாக்குப்பதிவு நடைபெறும் வாக்குச்சாவடி மையம் அமைந்துள்ள ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் பயிலும் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் வாக்குப்பதிவு நடைபெறும் 16-வது வார்டில் உள்ள அரசு அலுவலர்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் வாக்களிக்கும் வகையில் இன்று (21-ந்தேதி) விடுமுறை அறிவித்து மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

Similar News