தமிழ்நாடு செய்திகள்
கொள்ளை

ஓடும் டெம்போவில் நூதன முறையில் ரூ.1லட்சம் நகையை திருடி சென்ற டிப்-டாப் பெண்கள்

Published On 2022-01-05 12:09 IST   |   Update On 2022-01-05 12:09:00 IST
புதுவையில் ஓடும் டெம்போவில் நூதன முறையில் ரூ.1லட்சம் நகையை திருடி சென்ற டிப்-டாப் பெண்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
புதுச்சேரி:

திருக்கனூர் சரஸ்வதி நகரை சேர்ந்தவர் இளவரசன் (வயது56). இவர் திருக்கனூரில் தீவன கடை நடத்தி வருகிறார். இவரது மகளுக்கு அடுத்த மாதம் திருமணம் நடை பெறவுள்ளது. இதற்காக இளவரசன் தனது மனைவி இந்திராணியுடன் புதுவை நகை கடைக்கு நகை வாங்க வந்தார்.

புதுவை அண்ணா சாலையில் உள்ள ஒரு நகை கடையில் அவர்கள் 15 பவுன் நகை வாங்கினர். அந்த நகையை தனித்தனியாக 7 பெட்டிகளில் ஒரு பையில் வைத்துக் கொண்டு கணவன்-மனைவி இருவரும் புதிய பஸ் நிலையத்துக்கு வர டெம்போவில் ஏறினர்.

அப்போது அவர்களுடன் 2 டிப்-டாப் பெண்கள் ஒரு கை குழந்தையுடன் டெம்போவில் ஏறி நின்றபடி பயணம் செய்தனர். சிறிது தூரம் சென்றதும் அந்த டிப்-டாப் பெண்கள் சில்லரை காசுகளை கீழே போட்டுவிட்டு அதை எடுப்பதுபோல் பாவனை செய்தனர்.

அப்போது அதில் ஒரு பெண் இந்திராணியின் காலை வேகமாக மிதித்தார். ஏற்கனவே கால்வலியால் அவதியடைந்து வந்த இந்திராணிக்கு அந்த பெண் காலால் மிதித்ததால் வலியால் துடித்தார்.

அந்த நேரத்தில் நகை வைத்திருந்த பை நழுவி கீழே விழுந்தது. ஆனாலும் இந்திராணி சுதாரித்துக் கொண்டு உடனே நகை பையை எடுத்துக்கொண்டார். தொடர்ந்து இந்திராணியும், அவரது கணவரும் டெம்போவில் புதிய பஸ் நிலையத்துக்கு வந்து கொண்டிருந்தனர்.

புதிய பஸ் நிலையத்தில் டெம்போ நின்றதும் டிப்-டாப் பெண்களில் ஒரு பெண் திடீரென மயங்கி விழுந்தது போல் நடித்து கீழே சாய்ந்தார். இதனால் டெம்போவில் பயணம் செய்த இந்திராணி உள்பட பயணிகள் யாரும் கீழே இறங்க முடியாமல் டெம்போவிலேயே உட்கார்ந்து இருந்தனர்.

சுமார் 15 நிமிடத்துக்கு பிறகு மயக்கம் தெளிந்தது போல் அந்த பெண் எழுந்தார். இதைத்தொடர்ந்து இந்திராணி மற்றும் மற்ற பயணிகள் டெம்போவில் இருந்து கீழே இறங்கினர். பின்னர் இந்திராணி தனது கணவருடன் திருக்கனூர் செல்லும் பஸ்சில் ஏறி அமர்ந்தார்.

அப்போது நகை வைத்திருந்த பையை திறந்து பார்த்த போது அதில் 3 பெட்டிகள் காணாமல் போனதை கண்டு இந்திராணி அதிர்ச்சியடைந்து அலறி னார். அந்த 3 பெட்டிகளில் 2 செட் கம்மல் மற்றும் குருமாத் ஆகிய 3 பவுன் நகை வைத்திருந்தனர். அந்த நகைகளை டெம்போவில் வந்த டிப்-டாப் பெண்கள் திருடி சென்றது தெரிய வந்தது.

இதையடுத்து இந்திராணி யும் அவரது கணவர் இளவரசனும் பஸ்சை விட்டு இறங்கி அந்த மர்ம பெண்களை தேடினர். ஆனால் அவர்கள் எங்கும் இல்லை. நகையுடன் அவர்கள் மாயமாகி விட்டனர். திருட்டு போன நகையின் மொத்த மதிப்பு ரூ.1லட்சம் ஆகும்.

இதுகுறித்து இளவரசன் உருளையன்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து நூதன முறையில் நகையை திருடி சென்ற பெண்களை தேடி வருகிறார்கள்.

Similar News