தமிழ்நாடு
கொலை செய்யப்பட்ட மூதாட்டி காமாட்சி

ஜெயங்கொண்டம் அருகே தாயை கொன்று புதைத்து, நாடகமாடிய மகன்: உடல் தோண்டி எடுப்பு

Published On 2021-12-27 07:15 GMT   |   Update On 2021-12-27 07:15 GMT
சொத்தை எழுதிதர மறுத்த தாயை கொன்று புதைத்து நாடகமாடிய மகன் கைது செய்யப்பட்ட சம்பவம் ஜெயங்கொண்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அமிர்தராயங்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் சந்திரஹாசன். இவரது மனைவி காமாட்சி (வயது 85). இவர்களுக்கு 3 மகள்கள், 2 மகன்கள். இதில் மகள்கள் 3 பேருக்கும் திருமணம் ஆகி கணவர் வீடுகளில் வசித்து வருகின்றனர்.

2 மகன்களில் ஒரு மகன் இறந்து விட்டார். கடைசி மகன் செல்வம் (40) அமிர்தராயங்கோட்டை பகுதியில் மனைவி குழந்தைகளுடன்  வசித்து வருகிறார். தாய் காமாட்சி தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் அவர் தனது பெயரில் இருக்கும் 1 ஏக்கர் விவசாய நிலத்தை தனது மூத்த மகள் சுமதிக்கு எழுதி கொடுக்க திட்டமிட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதற்கு மகன் செல்வம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தார். 

மேலும் அந்த நிலத்தை தனது பெயருக்கு எழுதி தருமாறு தாயிடம் அவ்வப்போது சண்டை போட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தனியாக வசித்து வந்த காமாட்சி கடந்த இரு வாரங்களுக்கு முன்பு மாயமானார். மகள் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் எந்த தகவலும் கிடைக்கவில்லை. 

இந்த நிலையில் மூதாட்டி மாயமான அடுத்த இரு தினங்களில் அவரின் மகன் செல்வம் சிறிதளவு பூச்சிகொல்லி மருந்தை குடித்துவிட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் போய் சேர்ந்து கொண்டார். தாய் மாயமான துக்கத்தில் விஷம் அருந்தியதாக கூறி வந்தார். 

இதற்கிடையே காமாட்சி மாயமானது தொடர்பாக அவரின் மூத்த மகள் சுமதி தா.பழூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் செல்வத்திடம் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர். இதில் சொத்து எழுதிதர மறுத்த காரணத்தால் தாயை கட்டையால் தாக்கி கொன்று வீட்டில் இருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அணைக்குடம் பாட்டா கோவில் ஓடையில் உடலை புதைத்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் இன்று அவரை கைது செய்து உடலை தோண்டி எடுத்து விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
Tags:    

Similar News