செய்திகள்
நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட வீட்டை படத்தில் காணலாம்.

கூடுவாஞ்சேரி அருகே சித்த மருத்துவர் வீட்டில் 110 பவுன் நகை கொள்ளை

Published On 2021-02-25 09:47 IST   |   Update On 2021-02-25 09:47:00 IST
கூடுவாஞ்சேரி அருகே சித்த மருத்துவர் வீட்டில் 110 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது.
வண்டலூர்:

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த கன்னிவாக்கம் கிராமத்தில் உள்ள திருவள்ளுவர் சாலை பகுதியை சேர்ந்தவர் செந்தாமரை (வயது 70). ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலரான இவர் கடந்த 11-ந்தேதி தனது வீட்டை பூட்டி விட்டு மனைவியுடன் சென்னையில் உள்ள தனது மகளின் புதுமனை புகுவிழாவில் கலந்து கொள்வதற்காக சென்றார். இவரது வீட்டின் மாடியில் மகன் நந்தகுமார் (வயது 40) வசித்து வருகறார்.

சித்த மருத்துவரான இவர் நேற்று முன்தினம் மாலை தனது மேல் மாடி வீட்டை பூட்டிக் கொண்டு வளசரவாக்கத்தில் உள்ள தனது மனைவியை அழைத்து வருவதற்காக சென்றார். நேற்று காலை செந்தாமரை வீட்டுக்கு வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 10 பவுன் நகை திருட்டு போனது தெரியவந்தது. இதையடுத்து மாடியில் உள்ள தனது மகனின் வீட்டை பார்த்த போது அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு மேலும் அதிர்ச்சி அடைந்தார். 

உள்ளே சென்று பார்த்தபோது மகனின் படுக்கை அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 100 பவுன் தங்க நகை, ரூ.50 ஆயிரம் 2 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து சித்த மருத்துவர் நந்தகுமார், ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர் செந்தாமரை இருவரும் கூடுவாஞ்சேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வண்டலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அனுமந்தன், கூடுவாஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் மற்றும் தனிப்படை போலீசார் விரைந்து சென்று திருட்டு நடந்த வீட்டில் ஆய்வு செய்தனர். போலீசார் அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்தனர்.

காஞ்சீபுரத்தில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகள் பதிவு செய்யப்பட்டது. மோப்ப நாய் சிறிது தூரம் ஓடி பின்னர் நின்று விட்டது. இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ள காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

Similar News