செய்திகள்
மாமல்லபுரம் கலங்கரை விளக்கத்தில் திரண்ட சுற்றுலா பயணிகளை காணலாம்.

கொரோனா தொற்றால் மூடப்பட்ட மாமல்லபுரம் கலங்கரை விளக்கம் 11 மாதங்களுக்கு பிறகு திறப்பு

Published On 2021-02-15 07:37 IST   |   Update On 2021-02-15 07:37:00 IST
கொரோனா தொற்று காரணமாக மூடப்பட்ட மாமல்லபுரம் கலங்கரை விளக்கம் 11 மாதங்களுக்கு பிறகு திறக்கப்பட்டது.
மாமல்லபுரம்:

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் நகரின் மையப்பகுதியில் உள்ள நீளமான பாறை மீது இயற்கை எழில் கொஞ்ச அமைந்துள்ளது, பழமை வாய்ந்த கலங்கரை விளக்கம். இது ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் அதாவது, 1887-ம் ஆண்டு கட்டப்பட்டது. வங்க கடலில் பயணிக்கும் கப்பல் மற்றும் படகுகள் இந்த பகுதியை கடந்து செல்லும் போது மாலுமிகளுக்கு அடையாளம் காட்ட வசதியாக இந்த கலங்கரை விளக்கம் அமைக்கப்பட்டது. மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் இந்த கலங்கரை விளக்கம் செயல்பட்டு வருகிறது.

தொடக்கத்தில் இந்த கலங்கரை விளக்கத்தில் மண்எண்ணெய் மூலம் விளக்கு எரிக்கப்பட்டது. கடந்த 1940-ம் ஆண்டு மின்னணுகருவிகள் பொருத்தப்பட்டு, நவீனதொழில் நுட்பத்தில் இந்த கலங்கரை விளக்கம் இயங்கி வருகிறது. இந்த கலங்கரை விளக்கம் மீது ஏறி மாமல்லபுரம் நகரின் முழு அழகையும் ரசிக்கலாம்.

இந்த நிலையில் கொரோனா தொற்று காரணமாக மாமல்லபுரம் கலங்கரை விளக்கம் கடந்த 11 மாதங்களாக மூடப்பட்டு சுற்றுலா பயணிகள் கண்டுகளிக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது. இநத நிலையில் நேற்று சுற்றுலா பயணிகள் கண்டுகளிப்பதற்காக மீண்டும்11 மாதங்களுக்கு பிறகு வழிகாட்டி நெறிமுறைகளுடன் திறக்கப்பட்டது.

நீண்ட நாட்களுக்கு பிறகு திறக்கப்பட்டதால் ஏராளமானோர் இதன் மீது ஏறி மாமல்லபுரம் நகரின் அழமை கண்டுகளித்தனர். பலர் கலங்கரை விளக்கத்தின் மீதும், அதன் கீழ் உள்ள பாறைக்குன்று நுழைவு வாயில் பகுதியிலும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். கலங்கரை விளக்கத்தின் மேல் ஏறி பார்க்க சுற்றுலா பயணி ஒருவருக்கு தலாரூ.10 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இந்தியாவிலேயே மலை பாறை குன்றின் மீது அதிக உயரத்தில் அமைந்துள்ள ஒரே கலங்கரை விளக்கம் என்ற சிறப்பை மாமல்லபுரம் கலங்கரை விளக்கம் பெற்றுள்ளது. மேலும் கலங்கரை விளக்க வளாகத்தில் உள்ள அருங்காட்சியகமும் 11 மாதங்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகள் பார்வையிட வசதியாக நேற்று திறக்கப்பட்டது.

Similar News