செய்திகள்
தெப்பக்காடு யானை முகாமுக்கு கால்நடையாக ரிவால்டோ யானையை அழைத்துச்செல்லும் வனத்துறையினர்

காயம் அடைந்த ‘ரிவால்டோ’ யானை கால்நடையாக தெப்பக்காடு முகாமை நெருங்கியது

Published On 2021-02-03 15:23 IST   |   Update On 2021-02-03 15:23:00 IST
ரிவால்டோ யானைக்கு பிடித்த பழங்களை வழங்கி சாலை வழியாக தெப்பக்காடு யானைகள் வளர்ப்பு முகாமுக்கு அழைத்துச்செல்வதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
ஊட்டி:

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தின் வெளிமண்டல வனப்பகுதியான வாழைத்தோட்டம், மாவநல்லா அதன் சுற்றுப்புறப் பகுதியில் பொதுமக்களுடன் 15 ஆண்டாக ‘ரிவால்டோ‘ என்ற காட்டு ஆண் யானை சகஜமாக பழகி வந்தது. சமீபத்தில் அந்த யானை போக்குவரத்து நிறைந்த சாலைக்கு அடிக்கடி வந்தது.

அதற்கு காயம் அல்லது உடல் நலப்பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று சிங்காரா வனச்சரகர் காந்தன் தனது உயர் அதிகாரிகளுக்குத் தகவலைத் தெரிவித்திருந்தார். இதனையடுத்து யானையை கண்காணித்து வந்தனர்.

ரிவால்டோவுக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. ரிவால்டோவுக்கு நீண்ட தந்தங்கள் இருப்பதால் கடவாய்ப் பகுதியில் புண் இருப்பதை வனத்துறையினர் கண்டறிந்தனர். இதுகுறித்து வனத்துறை கால்நடை மருத்துவர்களுடன் ஆலோசிக்கப்பட்டது.

மேலும் இந்த பகுதியில் தான் காட்டு யானை தீ பந்தம் வீசியதால் பலியானது. இதனையடுத்து இந்த யானைக்கும் அதே கதி ஏற்படலாம் என்று அஞ்சப்பட்டது.

இதனையடுத்து யானையின் தற்போதைய நிலை குறித்துக் கேட்டறிந்த முதன்மைச் சரணாலய வனப்பாதுகாவலர் சிகிச்சைக்காக ரிவால்டோவை தெப்பக்காட்டில் உள்ள வளர்ப்பு யானைகள் முகாமுக்குக் கொண்டு செல்ல உத்தரவிட்டார்.

அதன்பேரில் கும்கி யானைகள் உதவியின்றி, மயக்க ஊசி செலுத்தப்படாமல், இதுவரை இல்லாத நடைமுறையாக சிங்காரா வனச்சரக அலுவலர் காந்தன் தலைமையில் வேட்டைத் தடுப்புக் காவலர்கள், வன ஊழியர்கள் சாலை வழியாக இந்த காட்டு யானைக்கு பழங்கள் உள்ளிடவற்றைக் கொடுத்து அதை நடக்கவைத்தே அழைத்துச்செல்கின்றனர்.

வாழைத்தோட்டம் பகுதியில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவுக்கு நடந்து மசினகுடி பகுதிக்கு வந்துள்ள இந்த யானையை அங்கு நேற்று தங்கவைத்தனர்.

இன்று (புதன்கிழமை) காலை மீண்டும் அதற்குப் பிடித்த பழங்களை வழங்கி சாலை வழியாக இங்கிருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ள தெப்பக்காடு யானைகள் வளர்ப்பு முகாமுக்கு அழைத்துச் செல்ல இருப்பதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

தங்களுடன் நெருங்கிய பழகிய ரிவால்டோ யானை பிரிந்து செல்வதை ஏற்கமுடியவில்லை. மனம் வேதனையாக உள்ளது என்ற அந்த பகுதி மக்கள் வருத்தம் தெரிவித்தனர்.

Similar News