செய்திகள்
அரியலூரில் பயணிகள் நிழற்குடையில் அமர்ந்து தேர்வு எழுதிய மாணவர்களை படத்தில் காணலாம்.

பயணிகள் நிழற்குடை, மைதானங்களில் தேர்வு எழுதிய மாணவ-மாணவிகள்

Published On 2020-12-23 07:33 IST   |   Update On 2020-12-23 07:33:00 IST
அரியலூரில் பயணிகள் நிழற்குடை, மைதானங்களில் அமர்ந்து கல்லூரி மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர். தங்களை கல்லூரிக்குள் அனுமதிக்கவில்லை என்று புகார் தெரிவித்தனர்.
தாமரைக்குளம்:

அரியலூர் நகரில் அரசு கலைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் 13 துறைகளில் சுமார் 3 ஆயிரத்து 500 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். கொரோனா பரவலை தடுக்க கடந்த மார்ச் மாதம் முதல் கல்லூரி மூடப்பட்டது. பின்னர் அரசு அறிவித்தபடி கடந்த 7-ந் தேதி கல்லூரி திறக்கப்பட்டு, இளங்கலை மற்றும் முதுகலை இறுதி ஆண்டு மாணவ, மாணவிகளுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. முதலாம் ஆண்டு மற்றும் 2-ம் ஆண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமே வகுப்புகள் நடத்தப்படுகிறது.

மேலும், அரசு சார்பில் கடந்த 10 நாட்களுக்கு கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பருவத்தேர்வு(செமஸ்டர்) அறிவிக்கப்பட்டது. அதன்படி கடந்த வாரம் முதல் தேர்வுகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில் அரியலூர் அரசு கல்லூரியில் முதலாம் மற்றும் 2-ம் ஆண்டு படிக்கும் மாணவர்களில் ஜெயங்கொண்டம், தா.பழூர், செந்துறை, திருமானூர், கூத்தூர், விருத்தாசலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் 800-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தினமும் காலை அரியலூருக்கு வந்து, சாலையோரங்களிலும், தெருக்களிலும், பஸ் நிறுத்த பயணிகள் நிழற்குடைகளிலும், சில விளையாட்டு மைதானங்களிலும் அமர்ந்து, தேர்வுகளை எழுதுகிறார்கள். முதலாம் மற்றும் 2-ம் ஆண்டு மாணவ, மாணவிகளுக்கு கல்லூரி வளாகத்திற்குள் தேர்வுகள் எழுத கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் அனுமதி வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இது குறித்து மாணவ, மாணவிகள் கூறுகையில் “இறுதியாண்டு மாணவர்கள் மட்டுமே கல்லூரியில் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளனர். முதலாம் மற்றும் 2-ம் ஆண்டு மாணவர்கள் வீட்டில் இருந்து தேர்வு எழுதி, மதியம் 3 மணிக்குள் கல்லூரியில் சமர்ப்பிக்க தெரிவிக்கப்பட்டது. ஆனால் நாங்கள் வீட்டில் இருந்து தேர்வை எழுதினால் மதியம் 3 மணிக்கு எங்கள் விடைத்தாள்களை கல்லூரியில் சமர்ப்பிக்க முடியாது. எனவே நாங்கள் கல்லூரிக்கு வந்தோம். ஆனால் எங்களுக்கு தேர்வு எழுத இடம் கொடுக்கவில்லை. கல்லூரி வளாகத்திற்குள் செல்லவும் அனுமதியில்லை. எனவே கல்லூரிக்கு வெளியே, கிடைத்த இடத்தில் அமர்ந்து நாங்கள் தேர்வு எழுதுகிறோம். இதனால் எங்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. குறிப்பாக கழிவறை போன்ற வசதியின்றி மாணவிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மழை பெய்தால் மேலும் சிரமம் ஏற்படும். எனவே நாங்கள் கல்லூரியில் தேர்வு எழுத அரசும், கல்லூரி நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

இது பற்றி அரசு கலைக்கல்லூரி நிர்வாகத்தினரை தொடர்பு கொண்டபோது, ஒரு அதிகாரி கூறுகையில், "நாங்கள் மாணவர்களுக்கு வீட்டில் இருந்தே தேர்வை எழுத அறிவுறுத்தினோம். அவர்கள் விடைத்தாள்களை பதிவு தபால் மூலமாகவும் அனுப்பலாம். இருப்பினும் அவர்கள் இங்கு வருகிறார்கள்", என்றார். ஆனால் விடைத்தாள்களை மதியம் 3 மணிக்குள் கல்லூரியில் நேரடியாகவே சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டதாகவும், தபால் முறை பற்றி கூறப்படவில்லை என்றும் மாணவர்கள் தரப்பில் கூறப்பட்டது. இதனை கல்லூரி நிர்வாகம் மறுத்தது.

Similar News