செய்திகள்
நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்துகள் வாரியாக கட்டுப்பாட்டு அறைகள்- உள்ளாட்சித்துறை இயக்குனர் தகவல்
நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்துகள் வாரியாக கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளன என்று உள்ளாட்சித்துறை இயக்குனர் தகவல் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி:
புதுச்சேரி உள்ளாட்சித்துறை இயக்குனர் மலர்க்கண்ணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- நிவர் புயலை எதிர்கொள்ள நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துக்கள் வாரியாக பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. அதன்படி அனைத்து நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துகளிலும் கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளன. அவை 24 மணி நேரமும் இயங்கும். பேரிடர் காலத்தில் மக்களுக்கு உதவ பணியாளர்களை கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழுக்கள் 24 மணி நேரமும் கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பில் இருக்க வேண்டும். மக்கள் வசிக்கும் தாழ்வான பகுதிகளில் ஏற்படும் நீர் தேக்கத்தை உடனுக்குடன் வெளியேற்ற பம்பு செட்டுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. நோய் தொற்று பரவாமல் தடுக்க திடக்கழிவுகள் உடனடியாக அகற்றிடவும் கிருமி நாசினி தெளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பேரிடர் காலத்தில் மக்கள் தங்குவதற்கு எல்லா சமுதாய கூடங்களும் திறந்து வைக்கப்பட்டுள்ளது. மழைநீர் வெளியேறும் இடங்களில் ஏற்படும் அடைப்புகளை சரி செய்யவும், மரங்கள் விழுந்தால் அதனை உடனடியாக அப்புறப்படுத்தவும் பொக்லைன் மற்றும் வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
பொதுமக்கள் உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டு அறைகளை தொடர்பு உதவி பெறலாம். புதுவை நகராட்சி 0413-2227518, உழவர்கரை-2200382, அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து-2601376, பாகூர்-2633438, மண்ணாடிப்பட்டு-2640161, நெட்டப்பாக்கம்-2699108, வில்லியனூர்-2660401 ஆகிய எண்களை தொடர்புகொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.