செய்திகள்
புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி

ஆரோக்கிய சேது செயலியை பயன்படுத்த நாராயணசாமி வேண்டுகோள்

Published On 2020-04-20 07:48 GMT   |   Update On 2020-04-20 07:48 GMT
ஆரோக்கிய சேது செயலியை பொதுமக்கள் அனைவரும் கண்டிப்பாக தங்களது மொபைல்போனில் டவுன்லோடு செய்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்று முதலமைச்சர் நாராயணசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புதுச்சேரி:

புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கொரோனா நோய்க்கு எதிரான உறுதியான இந்தப் போராட்டத்தில் இந்தியக் குடிமக்கள் அனைவரும் நலமாகவும் ஆரோக்கியத்துடனும் இருக்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசு, தனியார் கூட்டு முயற்சியில் ஆரோக்கிய சேது என்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்படும் அபாயம் தங்களுக்கு உள்ளதா என்று மக்கள் தங்களைத் தாங்களே சுயமாகப் பரிசோதனை செய்து கொள்வதற்கு இந்த செயலி உதவும். இந்த செயலியை பயனாளிகளே பயன்படுத்திக் கொள்ளும் வகையில் எளிமையாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலியை ஸ்மார்ட்போனில் நிறுவிய பின்னர் மொபைல் போனுக்கு அருகே உள்ள இதர கருவிகளை ஆரோக்கிய சேது செயலி கண்டறியும். ஒருவர் மற்றவர்களுடன் எவ்வாறு பழகுகிறார்கள். தொடர்பு கொண்டிருக்கிறார்கள். எந்த புளூடூத் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறார்கள். கணிப்பு நெறிகள், செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு இது கணக்கிடப்படும்.

இந்த அளவுகோளின்படி அடிப்படையில் இந்த தொடர்புகளில் ஏதேனும் ஒன்று பாசிட்டிவ்வாக இருந்தால், எந்த அளவிற்கு தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது என்பதை இந்த செயலி கண்டறியும். கொரோனா தொற்று எங்கு பரவக்கூடும் என்பதை மதிப்பீடு செய்து, உரியநேரத்தில் தேவையான நடவடிக்கை எடுக்கவும். தேவைப்படும் இடங்களில் தனிப்படுத்தலுக்கான சமூக இடைவெளியை உறுதி செய்யவும் இந்த செயலி அரசுக்கு உதவும்.

இந்த ஆரோக்கிய சேது செயலியை பொதுமக்கள் அனைவரும் கண்டிப்பாக தங்களது மொபைல்போனில் டவுன்லோடு செய்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்.

இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

Similar News