செய்திகள்
கொள்ளை நடந்த விவசாயி வீட்டை படத்தில் காணலாம்.

திட்டக்குடி அருகே விவசாயி வீட்டில் ரூ. 18 லட்சம் நகை கொள்ளை

Published On 2020-03-20 12:37 IST   |   Update On 2020-03-20 12:37:00 IST
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே நள்ளிரவில் விவசாயி வீட்டின் பின்பக்க வாசல் கதவை உடைத்து ரூ.18 லட்சம் மதிப்பிலான நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
திட்டக்குடி:

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள கண்டமத்தான் கிராமத்தை சேர்ந்தவர் சிவஞானம். விவசாயி. நேற்று இரவு இவர் தனது மனைவி செல்லக்கிளி என்பவருடன் காற்றுக்காக வீட்டு வராண்டாவில் கட்டில் போட்டு தூங்கினார்.

நள்ளிரவு சமயம் மர்ம நபர்கள் அங்கு வந்தனர். அவர்கள் பின்பக்க வாசல் கதவு தாழ்ப்பாளை இரும்பு கம்பியால் நெம்பினர். பின்னர் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் பீரோவை உடைத்தனர். பின்னர் அதில் இருந்த நகை பெட்டியை தூக்கி சென்றனர்.

இன்று அதிகாலை 3 மணி அளவில் செல்லக்கிளி தண்ணீர் குடிக்க எழுந்து வீட்டுக்குள் சென்றார். அப்போது வீட்டில் விளக்கு எரிந்ததோடு மின் விசிறி ஓடியது. உடனே பீரோ இருந்த அறைக்கு சென்றார். அப்போது பீரோ திறந்து கிடந்தது. அதில் இருந்த நகை பெட்டி மாயமானது கண்டு பதறினார். அந்த பெட்டியில் 55 பவுன் நகை, ரூ. 1 லட்சத்து 80 ஆயிரம் பணம் இருந்தது. இதனால் செல்லக்கிளி கூச்சல் போட்டார்.

சத்தம் கேட்டு வராண்டாவில் தூங்கி கொண்டிருந்த சிவஞானம் எழுந்து வந்தார். இவரது வீட்டின் அருகே அண்ணன்-தம்பி வீடுகள் உள்ளது. உடனே வெளியே வந்த சிவஞானம் அவர்களுக்கு தகவல் தெரிவித்தார். உடனே அவர்களும் எழுந்து வந்தனர். பின்னர் டார்ச்லைட் மூலம் வீட்டில் அருகே உள்ள வயல் பகுதியில் கொள்ளையர்கள் பதுங்கி உள்ளனரா? என்று பார்த்தனர்.

அப்போது வயல் பகுதியில் பணம் பெட்டி கிடந்தது. ஆனால் அதில் இருந்த நகை- பணத்தை கொள்ளையர்கள் திருடி சென்றனர். கொள்ளை போன நகையின் மதிப்பு ரூ. 18 லட்சம் ஆகும்.

இந்த தகவல் அந்த பகுதியில் காட்டு தீ போல பரவியது. இதனால் ஏராளமானோர் சிவஞானம் வீட்டு முன்பு திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து ராமநத்தம் போலீசில் சிவஞானம் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து அங்கு விரைந்தனர். கைரேகை நிபுணர்களும் சென்றனர். அவர்கள் கொள்ளையர்களின் ரேகைகளை பதிவு செய்து துப்பு துலக்கி வருகிறார்கள். கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. தனிப்படையினர் கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News