செய்திகள்
தற்கொலை செய்து கொண்ட மணிகண்டன், மகேஸ்வரியை படத்தில் காணலாம்.

பண்ருட்டி அருகே காதல் திருமணம் செய்து கொண்ட கணவன்-மனைவி தற்கொலை

Published On 2020-03-20 12:18 IST   |   Update On 2020-03-20 12:18:00 IST
பண்ருட்டி அருகே காதல் திருமணம் செய்து கொண்ட கணவன்- மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பண்ருட்டி:

கடலூர் மாவட்டம் பண்ருட்டி பழைய கச்சேரி ரோட்டை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 29). பெயிண்டர். இவரது மனைவி மகேஸ்வரி (22).

இவர்கள் 2 பேரும் காதலித்து கடந்த 9 மாதத்துக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். தற்போது மகேஸ்வரி 3 மாத கர்ப்பிணியாக இருந்தார்.

மணிகண்டனுக்கு குடிப்பழக்கம் உண்டு. அவர் தினமும் வேலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு வரும்போது மது குடித்து வருவார். இதனால் கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.

நேற்று இரவு 9 மணிக்கு மகேஸ்வரியும், மணிகண்டனும் சாப்பிட்டு விட்டு தூங்கினர். சிறிது நேரத்தில் மகேஸ்வரி எழுந்தார். பின்னர் அவர் சேலையால் தூக்கில் தொங்கினார்.

திடுக்கிட்டு எழுந்த மணிகண்டன் தனது மனைவி தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவரை கீழே இறக்கி பார்த்த போது அவர் இறந்து விட்டதை அறிந்தார்.

இதையடுத்து மனவேதனை அடைந்த மணிகண்டனும் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இன்று காலை வெகுநேரமாகியும் மகேஸ்வரி வீட்டின் கதவு திறக்கப்படவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் பண்ருட்டி போலீசில் புகார் செய்தனர். உடனடியாக துணை போலீஸ் சூப்பிரண்டு நாகராஜன், இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

பின்னர் வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தனர். வீட்டில் மணிகண்டனும், அவரது மனைவி மகேஸ்வரியும் பிணமாக கிடந்தனர்.

2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

காதல் திருமணம் செய்து கொண்ட கணவன்- மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Similar News