செய்திகள்
கவர்னர் கிரண்பேடி

கொரோனா வைரஸ் பீதி- போன் மூலம் மக்கள் குறைகேட்க புதுவை கவர்னர் ஏற்பாடு

Published On 2020-03-14 14:31 IST   |   Update On 2020-03-14 14:31:00 IST
கொரோனா வைரஸ் நிலை சகஜமாகும் வரை போன் மூலம் பொதுமக்கள் தங்களின் குறைகளை மக்கள் சந்திப்பு நேரத்தில் தெரிவிக்க கவர்னர் கிரண்பேடி ஏற்பாடு செய்துள்ளார்.
புதுச்சேரி:

புதுவை கவர்னர் மாளிகையில் நாள்தோறும் மாலை 5 மணி முதல் 7 மணி வரை பொதுமக்கள் சந்திப்பு நேரம் கடைபிடிக்கப்பட்டது.

இந்த நேரத்தில் யார் வேண்டுமானாலும் கவர்னர் மாளிகை வந்து தங்களின் புகார்களை தெரிவிக்க கவர்னர் கிரண்பேடி ஏற்பாடு செய்திருந்தார். கொரோனா வைரஸ் பரவி வரும் காரணமாக மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டாம் என மத்திய அரசு அனைத்து மாநிலங்களையும் அறிவுறுத்தியுள்ளது.

இதன்படி புதுவை கவர்னர் மாளிகையில் நாள்தோறும் நடத்தப்பட்ட மக்கள் சந்திப்பு ரத்து செய்யப்படுவதாக கவர்னர் மாளிகை அறிவித்தது.

இந்த நிலையில் போன் மூலம் பொதுமக்கள் தங்களின் குறைகளை மக்கள் சந்திப்பு நேரத்தில் தெரிவிக்க கவர்னர் கிரண்பேடி ஏற்பாடு செய்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் கூறியிருப்பதாவது:-

கவர்னர் மாளிகை தொலைதொடர்பு நிர்வாகத்தின் மூலம் கொரோனா வைரஸ் நிலை சகஜமாகும் வரை பொதுமக்களிடம் போன்மூலம் குறைகளை கேட்க முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.



கவர்னர் மாளிகையை தொடர்பு கொள்ள நினைப்பவர்கள் நேரடியாக தங்கள் புகார்களை தெரிவிக்கலாம். ஏற்கனவே கவர்னர் மாளிகை சந்திப்பு நேரமாக இருந்த மாலை 5 மணி முதல், இரவு 7 மணி வரை திங்கள் முதல் புதன்கிழமை வரை மக்கள் தங்கள் புகார்களை தெரிவிக்கலாம்.

இதற்காக 2224499, 2225390, 2334050 என்ற எண்கள் செயல்பாட்டில் இருக்கும்.

பொதுமக்களின் புகார்கள் பதிவு செய்யப்பட்டு கவர்னர் மாளிகை குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தேவைப்பட்டால் சம்பந்தப்பட்ட துறைக்கு புகார்தாரரின் ஆடியோ அனுப்பி வைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

புதுவை கவர்னர் மாளிகை தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மக்களின் குறைகளை தீர்க்க உரிய முயற்சியை மேற்கொண்டுள்ளது.

வருகிற 16-ந் தேதி முதல் இந்த மக்கள் குறைகேட்பு தொடங்கும். மக்கள் சந்திப்பு நேரம் தவிர பொதுமக்கள் தங்கள் புகார்களை 1031 என்ற தொலைபேசி எண்ணில் எப்போது வேண்டுமானாலும் தங்கள் குறைகளை தெரிவிக்கலாம்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Similar News