செய்திகள்
மாணவர்கள் மோதிக்கொண்ட காட்சி

புதுவையில் தனியார் கல்லூரியில் மாணவர்கள் மோதல்- 5 பேர் காயம்

Published On 2020-03-13 05:19 GMT   |   Update On 2020-03-13 05:19 GMT
புதுவையில் தனியார் கல்லூரியில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதலில் மாணவர்கள் 5 பேர் காயமடைந்தனர்.
புதுச்சேரி:

புதுவை ஆச்சார்யா கல்வி குழுமத்தின் கீழ் என்ஜினீயரிங், கலை அறிவியில், ஆசிரியர் பயிற்சி கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் இயங்கி வருகிறது.

புதுவை வில்லியனூரில் ஒரே கல்வி வளாகத்தில் ஆச்சார்யா என்ஜினீயரிங் கல்லூரி மற்றும் ஆச்சார்யா கலை அறிவியல் கல்லூரியும் செயல்பட்டு வருகிறது. இந்த இரு கல்லூரி மாணவர்களிடையே யார் பெரியவர்? என்ற ரீதியில் அவ்வப்போது மோதல் இருந்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று காலை என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் ஒருவர் தன்னுடன் படிக்கும் மாணவியுடன் பேசிக் கொண்டிருந்தார். இதனை அதே கல்லூரியை சேர்ந்த மற்றொரு மாணவர் கண்டித்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து மாணவர் ஒருவருக்கு என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்களும், மற்றொருவருக்கு கலை அறிவியல் கல்லூரி மாணவர்களும் ஆதரவாக திரண்டனர். கல்லூரி வகுப்புகள் முடிவடையும் நேரம் என்பதால் இரு தரப்பினரும் கல்லூரி வளாகத்தில் மோதிக் கொண்டனர்.

இதனால் கல்லூரி வளாகமே பெரும் கலவரம் போல் காட்சி அளித்தது. மாணவர்கள் தங்களுக்குள் கையில் கிடைத்த கட்டை, கல், ஆகியவற்றை கொண்டு ஒருவர் மீது ஒருவர் வீசி தாக்கிக்கொண்டனர்.

மாணவர்களை கட்டுப்படுத்த முடியாமல் கல்லூரி பேராசிரியர்களும், ஊழியர்களும் திணறினர். இந்த தாக்குதலில் 5 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.

இந்த மோதல் சுமார் ½ மணி நேரம் நீடித்தது. இதன்பிறகு மாணவர்கள் தாங்களாகவே மோதலை கைவிட்டு கல்லூரியில் இருந்து வெளியேறினர்.

இந்த சம்பவம் குறித்து கல்லூரி நிர்வாகம் தரப்பிலோ, மாணவர்கள் தரப்பிலோ போலீசில் புகார் செய்யப்படவில்லை. இதனால் போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை.

இருப்பினும் கல்லூரி நிர்வாகத்தினர் சார்பில் மாணவர்களிடையே மீண்டும் மோதல் தொடராமல் தவிர்க்க கல்லூரிக்கு இன்று (வெள்ளிக்கிழமை) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.



Tags:    

Similar News