செய்திகள்
அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்.

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீது வன்கொடுமை சட்டத்தில் வழக்குப்பதிவு- போலீசில் சிறுவன் புகார்

Published On 2020-02-07 05:17 GMT   |   Update On 2020-02-07 05:17 GMT
செருப்பை கழற்ற சொன்ன அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீது வன்கொடுமை சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசில் சிறுவன் புகார் அளித்துள்ளார்.
ஊட்டி:

நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காட்டில் 2 குட்டி யானைகள் உள்பட 27 வளர்ப்பு யானைகளுக்கான நலவாழ்வு முகாம் நேற்று தொடங்கியது.

முகாமை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தொடங்கி வைத்தார். முகாம் தொடக்க விழாவின் போது அங்குள்ள விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

அங்கு சென்ற அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் இரு பழங்குடியின சிறுவர்களை டேய் பசங்களா இங்கே வாங்கடா.. என அழைத்து தனது செருப்பை கழற்ற சொன்னார்.

அப்போது 9-ம் வகுப்பு படித்து வரும் சிறுவன் குனிந்து திண்டுக்கல் சீனிவாசன் செருப்பை கழற்றினான். அந்த சமயத்தில் அங்கு வந்த அமைச்சரின் உதவியாளர் செருப்பை கழற்ற உதவினார். கலெக்டர் இன்னசென்ட் திவ்யா, முதுமலை புலிகள் காப்பக இயக்குனர் கிருஷ்ணகுமார் கவுசல், வனத்துறை செயலாளர் சம்பு கல்லோலிகர், சாந்தி ராமு எம்.எல்.ஏ. முன்னிலையில் இந்த சம்பவம் நடைபெற்றது.

அமைச்சரின் செருப்பை சிறுவன் கழற்றிய காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

இந்த செயலுக்கு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வருத்தம் தெரிவித்தார். ஊட்டியில் உள்ள தமிழக மாளிகையில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

முதுமலை யானைகள் புத்துணர்வு முகாமுக்கு கலெக்டர் மற்றும் வனத்துறை அதிகாரிகளுடன் சென்று கொண்டிருந்தேன். அப்போது அங்கிருந்த இரு சிறுவர்களை அழைத்து எனது செருப்பை கழற்ற சொன்னேன். எனது பேரன் போன்று இருந்ததால் அவர்களை அழைத்தேன்.

இதில் வேறு எந்த உள் நோக்கமும் இல்லை. அந்த சிறுவர்கள் மட்டுமின்றி வேறு யாருக்கேனும் இதில் வருத்தம் இருந்தால் அதற்கு நான் வருத்தம் தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

அமைச்சரின் செயலுக்கு நீலகிரி மாவட்ட தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம், நீலகிரி பண்டைய பழங்குடியினர் பேரவை, மக்கள் சட்ட மையம், பழங்குடியின சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

இந்த நிலையில் அந்த சிறுவனும், பழங்குடியினரும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீது மசினகுடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதில் தனது செருப்பை கழற்றி விடுமாறு கூறிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீது எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News