செய்திகள்
பலியான தந்தை - மகள் பவானி

கார்த்திகை தீபம் ஏற்றியபோது தீ விபத்து: தந்தை பலி-மகள் உயிருக்கு போராட்டம்

Published On 2019-12-11 06:23 GMT   |   Update On 2019-12-11 06:23 GMT
ஜெயங்கொண்டம் அருகே கார்த்திகை தீபம் ஏற்றிய போது ஏற்பட்ட தீ விபத்தில் தந்தை பலியானார். மகள் உயிருக்கு போராடி வருகிறார்.
ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள கழுமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம். இவர் உடையார்பாளையம் வடக்குத் தெருவில் பெட்டிக்கடை வைத்து வியாபாரம் செய்து வந்தார்.

இவரது இளைய மகள் பவானி அருகில் உள்ள கல்லூரி ஒன்றில் டிப்ளமோ படித்து வருகிறார். நேற்று கார்த்திகை திருநாளை முன்னிட்டு செல்வம் தனது இளைய மகள் பவானியுடன் கடையில் தீப விளக்குகளை ஏற்றிக்கொண்டிருந்தார்.

பவானி கடையின் உள்ளே சாமி படம் வைக்கப்பட்டிருந்த இடத்தின் அருகே விளக்கேற்றினார். இதில் எதிர்பாராதவிதமாக அருகிலுள்ள கீற்றில் தீ பட்டு மளமளவென எரிந்தது. பவானியின் உடல் மீதும் தீ பற்றியதால் அலறித்துடித்தார். இதைக்கண்ட செல்வம் மகளை காப்பாற்றுவதற்காக உள்ளே ஓடினார். அந்த சமயம் கீற்றில் பரவிய தீயால் மேற்கூரை சரிந்து விழுந்தது. இதில் செல்வம், பவானி இரு வரும் சிக்கிக் கொண்டனர்.

சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து செல்வத்தையும், பவானியையும் தீயில் இருந்து மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதில் செல்வம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். பவானி மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தகவலறிந்து ஜெயங்கொண்டம் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடம் சென்று தீ மேலும் பரவாமல் அணைத்தனர். கடை தீப்பற்றி எரிந்ததில் கடைக்குள் இருந்த மளிகை சாமான்கள் மற்றும் ஏராளமான பொருட்கள் முழுவதும் எரிந்து சாம்பலானது. இதுகுறித்து உடையார்பாளையம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

கார்த்திகை தீபத்தின் போது நடந்த இந்த பரிதாப சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News