செய்திகள்
மாணவி தர்ஷினி

கோத்தகிரியில் நிலச்சரிவு- ஆற்றில் மூழ்கி மாணவி பலி

Published On 2019-10-20 15:17 GMT   |   Update On 2019-10-20 15:17 GMT
கோத்தகிரியில் பெய்து வரும் மழையால் நிலச்சரிவு ஏற்பட்டது. கை, கால்களை கழுவதற்காக ஆற்றில் இறங்கிய மாணவியை வெள்ளம் அடித்து செல்லப்பட்டதில் பரிதாபமாக இறந்தார்.
மஞ்சூர்:

கோத்தகிரியில் நேற்று முன்தினம் இரவு முதல் விடிய,விடிய பலத்த மழை கொட்டி தீர்த்தது. தொடர் மழை காரணமாக கோத்தகிரி காமராஜர் சதுக்கத்தில் இருந்து கோட்டாஹால் பகுதிக்கு செல்லும் சாலையில் 5 கி.மீ தூரத்திற்கு விரிசல் ஏற்பட்டது. மஞ்சூரில் பெய்த மழை காரணமாக ஊட்டி-மஞ்சூர் சாலையில் பல்வேறு இடங்களில் மண் சரிவுகள் ஏற்பட்டு சாலைகளில் பாறைகளும், மரங்களும் விழுந்தன. இதேபோல் தமிழக- கேரள எல்லையோர கிராமமான கிண்ணக்கொரை-மஞ்சூர் சாலையில் ஆங்காங்கே மண்சரிவு ஏற்படும், மரங்கள் முறிந்து விழுந்தும் கிடக்கின்றன. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

கிண்ணக்கொரை ஜெயில் தோட்டம் பகுதியில் உள்ள ஒரு வளைவில் மண் சரிவு ஏற்பட்டது. சீரமைப்பு பணிகள் நடந்து வரும் நிலையில் நேற்று இரவு முதல் பலத்த மழை பெய்தது. இதனால் சீரமைப்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. கூடலூர் அருகே பந்தலூர் அட்டி பகுதியை சேர்ந்தவர் தர்ஷினி(19). இவர் கூடலூர் கோழிப்பாலத்தில் உள்ள அரசு கல்லூரியில் பி.ஏ.ஆங்கிலம் 2-ம் ஆண்டு படித்து வந்தார். 

இவர் நேற்று மாலை கல்லூரி முடிந்து தனது தோழிகளுடன் அப்பகுதியில் உள்ள பாண்டியாற்றுக்கு சென்றார். அங்கு அவர்கள் அனைவரும் ஆற்றின் ஓரத்தில் நின்று விளையாடி கொண்டிருந்தனர். தர்ஷினி கை, கால்களை கழுவதற்காக ஆற்றில் இறங்கினார். அப்போது ஆற்றில் அதிகளவு தண்ணீர் வந்து கொண்டு இருந்ததால் எதிர்பாராதவிதமாக தர்ஷினி வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார். 

சிறிது தூரம் தொலைவில் மாணவி மயங்கி நிலையில் கிடந்தார். அவரை மீட்டு கூடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பரவலாக கனமழை பெய்துவருவதால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஒரத்துப்பாளையம் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்தது.

நொய்யல் ஆற்றில் வினாடிக்கு 1493 கன அடி தண்ணீர் ஒரத்துப்பாளையம் அணைக்கு வந்தது. இதனால் ஒரே நாளில் அணையில் 15 அடி தண்ணீர் தேங்கியுள்ளது. ஆற்றில் வருகிற தண்ணீர் முழுவதும் அணையில் தேக்கப்படாமல் வினாடிக்கு 527 கன அடி தண்ணீர்  அணையிலிருந்து நொய்யல் ஆற்றில் திறந்து விடப்பட்டது.
Tags:    

Similar News