செய்திகள்
கரடிகள் நடமாட்டம்

கோத்தகிரி பகுதியில் 2 குட்டிகளுடன் உலா வந்த கரடி

Published On 2019-09-27 03:25 GMT   |   Update On 2019-09-27 03:25 GMT
கோத்தகிரி பகுதியில் குட்டிகளுடன் கரடிகள் தொடர்ந்து உலா வருவதால் தொழிலாளர்கள், வாகன ஓட்டிகள் என அனைத்து தரப்பினரும் பீதியில் உள்ளனர்.
கோத்தகிரி:

கோத்தகிரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டம் வெகுவாக அதிகரித்து வருகிறது. உணவு மற்றும் தண்ணீரை தேடி குடியிருப்பு பகுதிகள் மற்றும் தேயிலை தோட்டங்களுக்குள் வனவிலங்குகள் புகுந்து விடுவது வழக்கமாகி உள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் அரவேனுவில் இருந்து கேத்தரின் நீர்வீழ்ச்சிக்கு செல்லும் சாலையில் மூணுரோடு பகுதியில் குறுக்கே 2 குட்டிகளுடன் கரடி உலா வந்தது. இதை கண்ட அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் பீதியடைந்தனர். மேலும் சற்று தொலைவிலேயே வாகனங்களை நிறுத்தினர். பின்னர் சிறிது நேரம் கழித்து கரடிகள் சாலையை விட்டு, அருகில் உள்ள தேயிலை தோட்டத்துக்குள் சென்றன. அதன்பின்னர் வாகன ஓட்டிகள் அங்கிருந்து புறப்பட்டனர்.

இதற்கிடையில் தேயிலை தோட்டத்துக்குள் சென்ற கரடிகள், அங்குள்ள மரங்களின் மீது ஏறி விளையாடின. இதை கண்ட பச்சை தேயிலை பறிக்கும் தொழிலாளர்கள், தோட்டத்தை விட்டு வெளியே ஓட்டம் பிடித்தனர். பின்னர் சிறிது நேரம் தேயிலை தோட்டத்திலேயே உலா வந்த கரடிகள், அதன்பிறகு அருகிலுள்ள வனப்பகுதிக்குள் சென்றன.

குட்டிகளுடன் கரடிகள் தொடர்ந்து அப்பகுதியில் உலா வருவதால் தொழிலாளர்கள், வாகன ஓட்டிகள் என அனைத்து தரப்பினரும் பீதியில் உள்ளனர்.
Tags:    

Similar News