செய்திகள்

இறப்பு சான்றிதழுக்கு ரூ.1000 லஞ்சம் வாங்கிய பதிவாளர் கைது

Published On 2018-07-27 10:43 IST   |   Update On 2018-07-27 10:43:00 IST
இறப்பு சான்றிதழுக்கு ரூ.1000 லஞ்சம் வாங்கிய பதிவாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #bribe

நாகர்கோவில்:

குளச்சல் அருகே பெத்தேல் புரத்தைச் சேர்ந்தவர் ஆண்டனி பிலோமின் சேவியர், (வயது 51), கொத்தனார்.

இவரது தந்தை மரிய சைமன். இவர் கடந்த 2002-ம் ஆண்டு இறந்து விட்டார். ஆனால் இது வரை அவரது இறப்பு சான்றிதழை பெறவில்லை. இந்த நிலையில் பிலோமின் சேவியர் தந்தையின் இறப்பு சான்றிதழ் கேட்டு கல்லுக் கூட்டத்தில் உள்ள பிறப்பு, இறப்பு பதிவு அலுவலகத்தில் மனு செய்தார்.

அந்த அலுவலக பதிவாளர் சுப்பிரமணியம் இறப்பு சான்றிதழ் வழங்க ரூ.1000 லஞ்சம் வேண்டுமென்று பிலோமின் சேவியரிடம் கேட்டதாக கூறப்படுகிறது. லஞ்சம் கொடுக்க விரும்பாத பிலோமின் சேவியர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.

லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் பெஞ்சமின் தலைமையிலான போலீசார் பிலோமின் சேவியரிடம் ரசாயனம் தடவிய இரண்டு 500 ரூபாய் நோட்டுக்களை கொடுத்து பதிவாளர் சுப்பிரமணியிடம் கொடுக்கு மாறு கூறி அனுப்பினர். இதையடுத்து பிலோமின் சேவியர் பிறப்பு இறப்பு பதிவு அலுவலகத்திற்கு சென்றார். ஆனால் அங்கு அவர் இல்லை.

பதிவாளர் சுப்பிரமணியத்தை போனில் தொடர்பு கொண்டபோது திங்கள் நகர் பஸ் நிலையத்தில் நிற்பதாக கூறினார். பிலோமின் சேவியர் அங்கு சென்று ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை கொடுத்தார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட அவரை கல்லுக்கூட்டத்தில் உள்ள அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினார்கள். அலுவலகத்திலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர். சுமார் 3 மணி நேரம் விசாரணைக்கு பிறகு சுப்பிரமணியத்தை நாகர்கோவிலுக்கு அழைத்து வந்தனர்.

பின்னர் இரணியலில் உள்ள சுப்பிரமணியம் வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினார்கள். நள்ளிரவு 11.30 மணிக்கு தொடங்கிய சோதனை அதிகாலை 1 மணி நேரம் நடந்தது. ஆனால் அங்கு பணம் எதுவும் சிக்கவில்லை.

இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் சுப்பிரமணியம் மீது வழக்குப்பதிவு செய்தனர். அவரை இன்று காலை நீதிபதி முன்பு ஆஜர் படுத்தினார்கள். சுப்பிரமணியத்தை ஜெயிலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். போலீசார் அவரை நாகர்கோவில் ஜெயிலில் அடைத்தனர்.

Tags:    

Similar News