செய்திகள்

கமல்ஹாசன்-ரஜினிக்கு வரும் கூட்டம் மாற்றத்தை ஏற்படுத்தாது: ஈஸ்வரன்

Published On 2018-04-02 15:11 IST   |   Update On 2018-04-02 15:11:00 IST
நடிகர்கள் ரஜினி, கமல் மட்டும் இல்லை நயன்தாரா வந்தால் கூட தான் கூட்டம் வரும். அந்த கூட்டத்தால் எந்த மாற்றத்தையும் கொடுக்க முடியாது என்று ஈஸ்வரன் கூறியுள்ளார்.
நம்பியூர்:

ஈரோடு மாவட்டம் நம்பியூரில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் மகளிர் கலாசார பாதுகாப்பு மற்றும் இளைஞர் எழுச்சி கூட்டம் நடந்தது.

இதில் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கலந்துகொண்டார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நம்பியூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகள் மிக வறட்சியான பகுதி. இப்பகுதியில் அத்திகடவு- அவிநாசி நீர் திட்டம் மிக அவசியமானது. அரசு சார்பில் வெறும் வெற்று அறிவிப்பு மட்டும் வந்து கொண்டுள்ளன.

கடந்த வருடம் ரூ.250 கோடி ஒதுக்கீடு செய்து அறிவிப்பு வந்தது இந்த வருடமும் அதையே கூறியுள்ளனர். எங்களுக்கு தேவை அறிவிப்பு இல்லை குடிநீர். இதற்கு உடனடியாக அடிக்கல் நாட்டி பணிகளை துவங்க வேண்டும். காவிரி நதி நீர் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியும் செயல்படுத்த ஆளும் மத்திய அரசு மறுத்து வருகிறது.

இதில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும் இதுவரை எந்த கருத்தையும் கூறவில்லை. இரண்டு தேசிய கட்சிகளும் கர்நாடகா தேர்தலை கருத்தில் கொண்டு தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்து வருகின்றன. தமிழக மக்கள் யாரும் விரும்பாத நீயூட்ரினோ திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்த விடமாட்டோம்.

இதில் தமிழகம் இத்திட்டத்தை விரும்பவில்லை என்றால் வேறு மாநிலத்தில் செய்து கொள்கிறோம் என கூறிய மத்திய அரசு தமிழகத்தில் இத்திட்டத்தை செயல்படுத்த வேகம் காட்டி வருகிறது. தமிழ்நாட்டை சுடுகாடு ஆக்காமல் இவர்கள் விட மாட்டார்கள். நடிகர்கள் ரஜினி, கமல் மட்டும் இல்லை நயன்தாரா வந்தால் கூட தான் கூட்டம் வரும். அந்த கூட்டத்தால் எந்த மாற்றத்தையும் கொடுக்க முடியாது.

கேரளாவின் மருத்துவ மற்றும் இதர கழிவுகளை கோவை மற்றும் சுற்று பகுதியில் கொட்டி செல்கின்றனர். இச்செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது. இது சம்பந்தமாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட முடிவு செய்ய உள்ளோம்.

கூட்டுறவு சங்க தேர்தல் அந்நியமான ஜனநாயகம் இங்கு நடைபெறுகிறது. வேட்பு மனு தாக்கல்செய்த அன்றே மாலையே வெற்றியாளர் பட்டியல் ஒட்டுகின்றனர். ஆளும் கட்சியின் இச்செயல் வருத்தமளிக்கிறது.

இவ்வாறு ஈஸ்வரன் கூறினார். #Tamilnews

Similar News