செய்திகள்
தற்கொலை செய்து கொண்ட ஆதிமூலம், கொலை செய்யப்பட்ட குமாரி (பழைய படம்)

கடலூர் அருகே மனைவி, 2 குழந்தைகளை கொன்று வியாபாரி தற்கொலை

Published On 2018-01-04 10:20 IST   |   Update On 2018-01-04 10:20:00 IST
குடும்ப பிரச்சினையில் கர்ப்பிணி மனைவி, 2 குழந்தைகளை கழுத்தை அறுத்து வியாபாரி கொலை செய்தார். பின்னர் அவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கடலூர்:

கடலூர் அருகே உள்ள புலியூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆதிமூலம் (வயது 35). இவரது மனைவி குமாரி(30). இவர்களுக்கு அபி என்ற அபிஷயா(7) என்ற மகளும், அபிஷேக் (4) என்ற மகனும் இருந்தனர். அபி அனுக்கம்பட்டில் உள்ள அரசு பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தாள். குமாரி 6 மாத கர்ப்பிணியாக இருந்தார்.

ஆதிமூலம் கோடை காலத்தில் ஐஸ் வியாபாரமும், மற்ற நாட்களில் கட்டிட வேலையும் செய்து வந்தார். அவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. அவர் அடிக்கடி மதுகுடித்துவிட்டு வீட்டுக்கு வந்து, மனைவியிடம் தகராறு செய்து வந்தார். மேலும் குடும்ப செலவுக்காக ஆதிமூலம் பலரிடம் கடன் வாங்கியதாகவும் கூறப்படுகிறது.

சமீபத்தில் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்த ஆதிமூலத்தை, குமாரி கண்டித்தார். இதில் ஆத்திரமடைந்த ஆதிமூலம் உருட்டுக்கட்டையால் குமாரியை தாக்கினார். இதனால் குமாரி, கணவருடன் கோபித்துக் கொண்டு, 2 குழந்தைகளுடன் அனுக்கம்பட்டியில் உள்ள தனது தாய் கனகவள்ளி வீட்டுக்கு சென்றுவிட்டார்.

பின்னர் அவரிடம் உறவினர்கள் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியதைத்தொடர்ந்து குமாரி, குழந்தைகளுடன் கணவரின் வீட்டுக்கு வந்தார். குமாரி கர்ப்பிணியாக இருந்ததால், அவருடன் தாய் கனகவள்ளியும் வந்து தங்கியிருந்தார். அந்த சமயத்தில் கடன் கொடுத்தவர்களும், ஆதிமூலத்திற்கு நெருக்கடி கொடுத்து வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் நேற்று கூலி வேலைக்கு சென்ற கனகவள்ளி மாலையில் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டில் குமாரி ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். பின்னர் அவர் வீட்டின் உள்ளே பதறியடித்துக் கொண்டு சென்றார்.

அங்கு ஆதிமூலம் தூக்கில் பிணமாக தொங்கிய நிலையிலும், அபி, அபிஷேக் ஆகியோர் ரத்த வெள்ளத்தில் பிணமாகவும் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினரும் அங்கு வந்து பார்த்தனர்.

இது பற்றி தகவல் அறிந்த குள்ளஞ்சாவடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, 4 பேரின் உடல்களையும் பார்வையிட்டனர்.

அப்போது குமாரி ஆடைகள் களைந்த நிலையில் கழுத்து அறுக்கப்பட்டும், அபி, அபிஷேக் ஆகியோரும் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தனர்.

கடன் தொல்லை மற்றும் குடும்ப பிரச்சினை காரணமாக ஆதிமூலம், கர்ப்பிணி மனைவி, 2 குழந்தைகளை உருட்டுக்கட்டையால் தாக்கியும், கத்தியால் கழுத்தை அறுத்தும் கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதுபற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள். #tamilnews

Similar News