செய்திகள்

மழையால் போக்குவரத்து நெரிசல்: போரூர் பாலத்தை திறந்த பொது மக்கள்

Published On 2017-06-20 11:14 GMT   |   Update On 2017-06-20 11:14 GMT
மழையால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் போரூர் பாலத்தை பொது மக்கள் திறந்து பயன்படுத்தினர், தகவல் அறிந்து வந்த போலீசார் தடுப்புகளை அமைத்து பாலத்தை மூடினார்.

சென்னை:

போரூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நீண்ட நாட்களாக போக்கு வரத்து நெரிசல் இருந்து வருகிறது.

காலை-மாலை நேரங்களில் பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் பொது மக்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக போரூர் சந்திப்பில் பாலம் கட்ட தி.மு.க. ஆட்சியின் போது கடந்த 2010-ம் ஆண்டு திட்டம் தீட்டப்பட்டது.

ரூ.34 கோடியில் 7 ஆண்டுகளாக கட்டுமான பணிகள் நடந்தது. தற்போது மேம்பால பணிகள் அனைத்தும் முடிந்துள்ளன.

இந்த பால பணிகளை கடந்த மார்ச் மாதமே நிறைவு செய்ய திடமிடப்பட்டிருந்தது. ஆனால் அதில் காலதாமதம் ஏற்பட்டு தற்போதுதான் பணிகள் முடிந்துள்ளன. 2011-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் அப்போது நெடுஞ்சாலை துறை அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமியும் பாலபணிகளை விரைவாக முடிக்க நடவடிக்கை எடுத்திருந்தார்.

பணிகள் அனைத்தும் முடிந்து திறப்பு விழாவிற்காக போரூர் மேம்பாலம் காத்திருக்கிறது. அப்பகுதி பொதுமக்களும் பாலத்தை விரைவில் திறக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆனால் பாலத்தை திறப்பதில் காலதாமதம் ஏற்பட்டு கொண்டே இருக்கிறது.

இந்த நிலையில் நேற்று சென்னையில் மழை பெய்தது. போரூர் பகுதிகளிலும் மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் போரூர் சிக்னலிலும், புதிய மேம்பாலம் அருகிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 2 கி.மீ. தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

இதனால் கார்-மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் மிகவும் சிரமப்பட்டனர். திறப்பு விழா நடைபெறாததால் பாலத்தின் மேலே வாகனங்கள் சென்று விடாதபடி போலீசார் தடுப்புகளை அமைத்திருந்தனர். கடும் நெரிசலில் சிக்கிய பொது மக்கள் அந்த தடுப்புகளை அகற்றி பாலத்தை திறந்தனர்.

பாலத்தில் கிண்டி நோக்கி செல்லும் பாதை திறக்கப்பட்டது. அதில் வாகனங்கள் ஒளி வெள்ளத்தை பீய்ச்சியபடி சென்றன.

நேற்று இரவு 7 மணி அளவில் திறக்கப்பட்ட இந்த பாலத்தில் 9 மணி வரையில் வாகனங்கள் சென்றன.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து சென்று அவசரம் அவசரமாக தடுப்புகளை அமைத்து பாலத்தை மூடினார்கள். அதன் பின்னர் பாலத்தில் போக்குவரத்து அனுமதிக்கப்படவில்லை.

இதன் காரணமாக இன்று காலையிலும் அப்பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டது. இதுதொடர்பாக கருத்து தெரிவித்த அப்பகுதி மக்கள் 7 ஆண்டுகளாக கடும் அவதிப்பட்டு வருகிறோம். இனியும் காலம் தாழ்த்தாமல் தமிழக அரசு உடனடியாக போரூர் பாலத்தை திறக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News