கேரள அரசை கண்டித்து ஈரோட்டில் ரெயிலை மறிக்க சென்ற தா.பாண்டியன் உள்பட 400 பேர் கைது
ஈரோடு:
பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதை கேரள அரசு உடனே நிறுத்த வேண்டும். காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனே அமைத்து பவானி ஆற்றுநீர் பிரச்சினையை தீர்க்க வேண்டும்.
கேரள அரசு தடுப்பணையை கட்டுவதை தடுக்க தமிழக அரசு உச்சநீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கையை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் கோவை, ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்க ளில் இன்று ரெயில் மறியல் போராட்டம் அறிவிக்கப்படிருந்தது.
அதன்படி ஈரோட்டில் நடந்த ரெயில் மறியல் போராட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட தலைவர் திருநாவுக்கரசு, மார்க். கம்யூ. மாவட்ட செயலாளர் முத்துசாமி ஆகியோர் தலைமை தாங்கினர். மார்க். கம்யூ. செயற்குழு உறுப்பினர் சண்முகம் முன்னிலை வகித்தார்.
இந்திய கம்யூனிஸ்டு தேசிய குழு உறுப்பினர் தா.பாண்டியன் இதில் கலந்து கொண்டு போராட்டத்தை தொடங்கி வைத்தார். இவர்கள் ஈரோடு காளைமாடுசிலைக்கு திரண்டு, பிறகு அங்கிருந்து ரெயிலை மறிக்க ரெயில் நிலையத்துக்கு ஊர்வலமாக சென்றனர்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். தா.பாண்டியன், இந்திய கம்யூனிஸ்டு முன்னாள் செயலாளர் குணசேகரன், வக்கீல் ப.பா. மோகன், தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட தலைவர் துளசி மணி உள்பட 400 பேர் கைது செய்யப்பட்டனர்.
முன்னதாக தா.பாண்டியன் போராட்டத்தை தொடங்கி வைத்து பேசியதாவது:-
நதிநீர் பிரச்சீனையை தீர்க்க வேண்டிய மத்திய அரசு 2 பூனைகள் இடையே அப்பத்தை பிரித்து கொடுக்கும் முறையை கையாள்கிறது. கர்நாடகா, கேரளா, ஆந்திரா ஆகிய மாநிலங்கள் தங்களது ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டுவதால் தமிழகத்துக்கு வரும் தண்ணீர் தடுக்கப்படுகிறது.
இந்த பிரச்சினையை சுமூகமாக பேசி தீர்வு காண முடிவு ஆகி இருந்தது. ஆனால் அதற்குள் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா உடல் நலம் சரியில்லாமல் இறந்து விட்டார். இந்த நிலையில் இந்த பிரச்சினை கேட்பாறின்றி கவனிப்பாறின்றி உள்ளது.
இவ்வாறு தா.பாண்டி யன் பேசினார்.