செய்திகள்

சேலம் அருகே நகை அடகு நிறுவனத்தில் 716 பவுன் நகை கொள்ளை

Published On 2016-08-16 12:20 GMT   |   Update On 2016-08-16 12:20 GMT
சேலம் அருகே நகை அடகு நிறுவனத்தில் 716 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆத்தூர்:

சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த கெங்கவல்லி கடைவீதியில் கேரளாவைச் சேர்ந்த ஒரு பிரபல தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான நகை அடகு கடை செயல்பட்டு வருகிறது.

இங்கு நகைகளை அடகு வாங்கி பணம் கொடுத்து வந்தனர். கடந்த 2 நாட்களாக விடுமுறை முடிந்து இன்று காலை ஊழியர்கள் கடையை திறந்து உள்ளே சென்றனர். அப்போது அவர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. கடையில் இருந்த லாக்கர்கள் உடைக்கப்பட்டிருந்தன. அந்த லாக்கரில் இருந்த சுமார் ரூ. 5 கோடி மதிப்புள்ள 716 பவுன் நகைகள் கொள்ளை போய் இருந்தது.

கொள்ளையர்கள் அந்த நிறுவனத்தின் பின்பக்க ஜன்னல் கம்பியை வளைத்து உள்ளே புகுந்து நகைகளை கொள்ளை அடித்து சென்றது தெரியவந்தது. இந்த நிறுவனம் அருகே தான் கெங்கவல்லி போலீஸ் நிலையம் செயல்பட்டு வருகிறது.

போலீஸ் நிலையம் அருகிலேயே பெரிய அளவில் கொள்ளை நடந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொள்ளை குறித்து தகவல் கிடைத்ததும் கெங்கவல்லி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்து வருகிறார்கள்.

நகையை அடகு வைத்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கடை முன்பு திரண்டிருந்தனர். இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டது யார் என்று தெரியவில்லை.

ஏற்கனவே சேலம் ரெயிலில் ரூ. 6 கோடி கொள்ளை போன நிலையில் தற்போது 716 பவுன் நகை கொள்ளை போய் இருப்பது போலீசாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த கொள்ளை குறித்து விசாரிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

Similar News