மு.க.ஸ்டாலின் இன்று மாலை ஈரோடு வருகிறார்
ஈரோடு:
தி.மு.க பொருளாளர் மு.க. ஸ்டாலின் ஈரோடு மாவட்டத்தில் இன்றும், நாளையும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
இதற்காக அவர் சென்னையில் இருந்து இன்று மாலை விமானம் மூலம் புறப்பட்டு கோவை வருகிறார். பிறகு அங்கிருந்து கார் மூலம் ஈரோடு வருகிறார்.
ஈரோடு கொங்கு கலையரங்கில் மாற்று கட்சியில் இருந்து பலர் தி.மு.க.வில் சேரும் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகிறார்.
இதன்பிறகு ஈரோடு பெருந்துறை ரோட்டில் உள்ள சக்தி சுகர்ஸ் விருந்தினர் விடுதியில் அவர் தங்கி ஓய்வு எடுக்கிறார்.
நாளை (செவ்வாய்க் கிழமை) காலை 8 மணிக்கு தீரன் சின்னமலை நினைவுநாளையொட்டி, ஓடாநிலையில் உள்ள தீரன் சின்னமலைசிலைக்கு மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.
பிறகு எழுமாத்தூர் அருகே உள்ள வெள்ள பெத்தாம் பாளையத்தில் முன்னாள் எம்.எல்.ஏ மு.சின்னசாமியின் நினைவிடத்தில் அவர் அஞ்சலி செலுத்துகிறார்.
இந்த நிகழ்ச்சிகளை முடித்து விட்டு கார் மூலம் கோவை செல்லும் அவர் பிறகு அங்கிருந்து விமானம் மூலம் சென்னை புறப்பட்டு செல்கிறார்.